Published : 17 Jun 2022 08:49 AM
Last Updated : 17 Jun 2022 08:49 AM

முகமது நபி அவமதிப்பு கருத்தை கண்டிக்கிறோம்; கட்சி உடனடி நடவடிக்கையை வரவேற்கிறோம் - அமெரிக்கா

நூபுர் சர்மா | கோப்புப் படம்

"முகமது நபிகளை அவமதிக்கும் வகையில் பேசியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே வேளையில், அவர்களின் மீது அவர்கள் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறோம்" என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், மனித உரிமைகள், மதச் சுதந்திரம், நம்பிக்கைகள் ஆகியன தொடர்பான விவகாரங்களில் நாங்கள் இந்தியாவுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க நாங்கள் இந்தியாவை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறோம் என்றார்.

டெல்லி பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றபோது முகமது நபிகளை தரக்குறைவாக விமர்சித்தார். அதே கருத்தை ஒத்த கருத்துகளை நவீன் குமார் ஜிண்டால் என்ற பாஜக பிரமுகரும் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். இதனால், முதன்முதலில் உ.பி. மாநிலம் கான்பூரில் கிளம்பிய எதிர்ப்பு வன்முறையாக மாறியது.

உ.பி.யின் கான்பூரில் கடந்த 3-ம் தேதி, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு கடையை மூடும்படி முஸ்லிம்கள் கூறியதை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 51 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் குற்றவாளி ஒருவரின் சொத்துகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன.

நூபுர் சர்மா சர்ச்சை பேச்சு விவகாரத்தில் உ.பி.யில் பிரயாக்ராஜ், சகரான்பூர், பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ ஆகிய 6 மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு மீண்டும் வன்முறை ஏற்பட்டது.
அதேபோல் மேற்குவங்கத்தின் ஹவுராவிலும் வன்முறைகள் நிகழ்ந்தன.

நூபுர் சர்மா, நவீன் ஜிண்டாலை பாஜக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியது. இருப்பினும் அதன் பின்னர் இந்தியா சர்வதேச அளவில் பெரிய எதிர்ப்புகளை சம்பாதிக்க நேர்ந்தது. வளைகுடா நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள், ஜிசிசி நாடுகள் ஆகியன என பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. மத சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என இந்தியாவுக்கு தலிபான் அரசும் அறிவுரை கூறியது. இந்நிலையில், "முகமது நபிகளை அவமதிக்கும் வகையில் பேசியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே வேளையில், அவர்களின் மீது அவர்கள் சார்ந்த பாரதிய ஜனதா கட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்ததை வரவேற்கிறோம்" என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு: இதற்கிடையில் புல்டோசர்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்படுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கட்டிடங்கள் இடிப்பு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது. சட்டவிரோத குடியிருப்பை இடிப்பது என்றாலும் கூட முறையான நோட்டீஸ் கொடுத்து சட்டத்துக்கு உட்படே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் நேற்று, “நினைவிருக்கட்டும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கு பிறகும் சனிக்கிழமை வரும்” என்று புல்டோசர் படத்துடன் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x