Published : 16 Jun 2022 03:16 PM
Last Updated : 16 Jun 2022 03:16 PM

அக்னி பாதை திட்ட எதிர்ப்பால் பற்றி எரியும் பிஹார்: பயணிகள் ரயில் பெட்டிக்கு தீவைப்பு

பாட்னா: ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்ப்பு முறையை அறிவித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் நடந்த போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சரான் மாவட்டம் சப்ரா எனும் பகுதியில் பயணிகள் ரயில் பெட்டிக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதுமே சாலை மறியல் நடைபெறுகிறது. அரா, பாகல்பூர், அர்வால், பக்சார், கயா, மூங்கர், நவாடா, சஹர்சா, சிவான் மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில் போராட்டம் வலுத்துள்ளது.

பிஹாரின் பக்சார் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாட்னா நோக்கிச் செல்ல வேண்டிய ஜன் சதாப்தி ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக பயணித்தது.

பிஹாரில் 8 மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளது.

கண்ணீர் புகை குண்டை பயன்படுத்தும் காவலர்

அக்னி பாதை திட்டம் என்றால் என்ன? ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இளைஞர்களும் இளம்பெண்களும் முப்படைகளில் சேரலாம். புதிய திட்டத்தில் பணியில் சேருவோர், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர்.

அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நான்கு ஆண்டுகள் பணி நிறைவுக்குப் பிறகு, வீரர்களின் பங்களிப்பு தொகை ரூ.5.02 லட்சம், அரசு அளிக்கும் அதே தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.11.71 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும். பணிக் காலத்தில் ரூ.48 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.

— ANI (@ANI) June 16, 2022

ஓய்வூதியம் கிடையாது: அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டால் கூடுதலாக ரூ.44 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பணியின்போது காயமடைந்து 100 சதவீத மாற்றுத் திறனாளியானால் ரூ.44 லட்சம், 75 சதவீதத்துக்கு ரூ.25 லட்சம், 50 சதவீதத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

ராகுல் எதிர்ப்பு: ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னி பாதை திட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவுக்கு இரண்டு பக்கங்களில் இருந்து அச்சுறுத்தல் நிலவும் சூழலில் அக்னி பாதை திட்டமானது நமது படைகளின் செயல்திறனை குறைக்கும். ராணுவத்தின் மாண்பு, பாரம்பரியம், வீரம் மற்றும் ஒழுக்கத்தை சமரசம் செய்யும் முயற்சிகளை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

ஓய்வு பெற்ற வீரர்களின் கருத்து என்ன?

> வீரர்களின் போராடும் எண்ணத்தில் தொய்வு ஏற்படும். இதனால் ராணுவத்துக்கே ஆபத்து நேரலாம்.

> ராணுவ வாழ்க்கையும் பணியும் பணத்தால் மதிப்பிடக்கூடியது அல்ல. அதில் சிக்கனம் செய்து அரசு செலவினங்களைக் குறைப்பதும் நல்ல யோசனை அல்ல.

> அக்னி பாதை திட்டம் என்பது தனிப்பட்ட ராணுவத்தை உருவாக்குவது போன்றது. 4 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கேங்ஸ்டர்களாக மாறினால் அரசு என்ன செய்யும்.
இவ்வாறாக எச்சரித்துள்ளனர்.

இளைஞர்களி கேள்வி இதுதான்:

> ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே வேலை என்றால். அதற்குப்பின்னர் நிலையான வேலை பெற வேறு ஏதும் படிப்பு படிக்க வேண்டும். அப்படியே படித்தாலும் அந்த வேலைக்காக ஏற்கெனவே படித்து தயாராக இருப்பவர்களுடன் நாங்கள் போட்டிபோட முடியாது. வயது ரீதியாக பின்தங்கிவிடுவோம்.

> நான் 2 ஆண்டுகளாக ராணுவத்தில் சேர உடற்தகுதியில் ஈடுபட்டு வருகிறேன். இப்போது 4 ஆண்டுகள் மட்டுமே பணி எனக் கூறுகின்றனர். நான் வெறும் 4 ஆண்டுகள் பணிக்காக இத்தனை மெனக்கிடல் செய்ய வேண்டுமா?

இவைதான் இளைஞர்களின் பிரதான கேள்வியாக இருக்கின்றன.

அரசாங்கமோ அக்னி வீரர்களின் எதிர்காலத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறிவருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, துணை ராணுவம், காவல்துறையில் முன்னுரிமை என பல சமாதானங்களையும் சொல்லிவருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x