Published : 16 Jun 2022 12:17 AM
Last Updated : 16 Jun 2022 12:17 AM

குடியரசுத் தலைவர் தேர்தல்: பரூக் அப்துல்லா (அ) கோபாலகிருஷ்ண காந்தி' - பவார் பின்வாங்கலால் எதிர்க்கட்சிகள் புதிய முடிவு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

ஜூலை 16-இல் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில், எதிர்கட்சிகளின் வேட்பாளருக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. பாஜக தலைமையில் ஆளும் கட்சிகளான தேசிய முன்னணி சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை அறிவிக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. இதற்காக மூத்த தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே களம் இறங்கி செயல்படத் தொடங்கினர்.

எனினும், காங்கிரஸை புறந்தள்ளும் வகையில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திடீரென களம் இறங்கினார். டெல்லியில் இன்று கூட்டம் நடத்தி ஆலோசிக்க முடிவு செய்தார். இதற்காக, ஒரே சமயத்தில் 22 எதிர்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். ஆனால், இந்தக் கூட்டம் தொடங்கும் முன்பாகவே கருத்து வேறுபாடுகள் எழ, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவற்றுடன் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட மூன்று கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

எனினும், இவர்கள் தவிர கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லிகாஜுர்னா கார்கே, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேவ கவுடா, சமாஜ்வாதியின் சார்பில் உபியின் முன்னாள் முதல்வரான அக்கட்சியின் தலைவருமானர் அகிலேஷ் சிங் யாதவ், இதன் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக் தளத்தின் ஜெயந்த் சவுத்ரி, சிபிஐ-யில் பினய் பிஸ்வாஸ், திமுகவில் எம்.பி டி.ஆர்.பாலு, சிவசேனாவின் சுபாஷ் தேசாய், தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா, பிடிபியின் மெஹபூபா முப்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், சரத் பவார் வெளியிட்ட ட்வீட்டில், "குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக தனது பெயரைப் பரிந்துரைக்கும் எதிர்க்கட்சிகளின் முன்மொழிவை நிராகரித்தேன். சாமானியர்களின் நல்வாழ்வுக்காக எனது சேவையைத் தொடர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்றுகூறி குடியரசுத் தலைவர் ரேஸில் இருந்து வெளியேறியதை அறிவித்தார். பவார் பின்வாங்கிய நிலையில், கூட்டத்தில் பொதுவேட்பாளர் குறித்த ஆலோசனை நடந்தது.

மம்தா பானர்ஜி தனது பரிந்துரையாக தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவையும், முன்னாள் மேற்குவங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர்களை முன்னிறுத்தியதாக கூட்டத்தில் பங்கேற்ற ஆர்எஸ்பி கட்சியின் என்கே பிரேம்சந்திரன் தகவல் தெரிவித்தார்.

கூட்டம் முடிந்தப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, "ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். தேர்வு செய்யப்படும் வேட்பாளருக்கு அனைவரும் ஆதரவு அளிப்பார்கள். மற்றவர்களுடன் ஆதரவு தொடர்பாக பேசுவோம். இது நல்ல தொடக்கம். இதுபோன்ற ஆலோசனை இனியும் நடக்கும். அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு இதுபோன்று மீண்டும் கூடுவோம்" என்றுத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x