Published : 15 Jun 2022 10:21 AM
Last Updated : 15 Jun 2022 10:21 AM

குடியரசுத் தலைவர் தேர்தல் | மம்தா அழைப்புவிடுத்த கூட்டத்தை புறக்கணித்தார் சந்திரசேகர ராவ்

குடியரசுத் தலைவர் பொது வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்புவிடுத்துள்ள கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

வலுவான கூட்டணிக்கு அச்சாரம்:

பொது வேட்பாளரை அறிவித்து குடியரசுத் தலைவர் தேர்தலிலேயே வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.

இதில் கலந்து கொள்ள ஸ்டாலின் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் இதில் பங்கேற்க போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே மறுத்து விட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், மம்தா பானர்ஜி அழைப்புவிடுத்துள்ள கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கலந்துகொள்ளும் எந்த ஒரு கூட்டத்திலும் மேடையைப் பகிர்ந்துகொள்வதில்லை என்று டிஆர்எஸ் உறுதியாக இருக்கிறது என்று சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைவதில் முதல் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சரத் பவா சம்மதிப்பாரா? குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நிறுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார். வேறு சில கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் அந்த சந்திப்பில் தேர்தலில் போட்டியிட சரத்பவார் ஆர்வம் காட்டவில்லை.
நேற்று மாலை மும்பையில் நடந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் "நான் போட்டியில் இல்லை, நான் குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்க்கட்சி வேட்பாளராக இருக்க மாட்டேன்" என்று சரத் பவார் கூறியதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் சரத் பவாரை சந்தித்து பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும் என சரத் பவாரிடம் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x