Published : 06 Jun 2022 06:40 AM
Last Updated : 06 Jun 2022 06:40 AM

உத்தராகண்ட் | தொலைதூரத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு 18 கி.மீ மலையேறி சென்ற தலைமை தேர்தல் ஆணையர்

டேராடூன்: நாட்டில் தேர்தல் நடைபெறும் போது கடினமான மலைப் பகுதிகள், ஆறுகள், அடர்ந்த வனப்பகுதிகளில் கூட வாக்குச் சாவடிகள்உள்ளன. குறிப்பாக பழங்குடி யினத்தவர்கள் வாழும் இடங்களுக்கு பல சிரமங்களை தாண்டி வாக்குச் சாவடி அதிகாரிகள் செல்கின்றனர். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், உத்தராகண்ட் மாநிலத்தில் தொலைதூரத்தில் உள்ள வாக்குச் சாவடியை பார்வையிட நேற்று 18 கி.மீ. தூரம் மலையேறி சென்றார்.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது துமக் கிராமம். இந்த கிராமம். இந்தப் பகுதிதான் மாநிலத்தின் தொலைதூரத்தில் உள்ள கடைசி கிராமம். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று ஹெலிகாப்டரில் பிபால்கோட்டி என்ற பகுதி வரை வந்தார். அங்கிருந்து கிமானா கிராமம் வரை காரில் சென்றார். அதன்பிறகு சாலை இல்லாததால் ராஜீவ் குமார் 18 கி.மீ. மலையேறி சென்றார்.அங்குள்ள அரசு கல்லூரிக்கு சென்றார். அங்குதான் பத்ரிநாத்சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட துமக் பகுதியில் வழக்கமாக வாக்குச் சாவடி அமைக்கப்படும். இந்த அரசு கல்லூரியை ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகள் மிகுந்த சிரமப்பட்டுதான் வந்தடை கின்றனர்.

இங்கு மொத்தம் 290 வாக்காளர் கள் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் இங்கு 80 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த பயணம் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:

நாட்டில் உள்ள பல வாக்குச் சாவடிகள் எளிதில் அடைய முடியாத வகையில் உள்ளன. அந்த இடங்களை சென்றடைவதில் பல ஆபத்துகளும் உள்ளன. அது போன்ற வாக்குச் சாவடிகளில் பணியாற்ற செல்லும் அதிகாரிகள், பணியாளர்களுக்கு ‘ஹார்ட்ஷிப் அலவன்ஸ்’ வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். அத்துடன், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள், தீவிரவாதம், நக்சல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள், கடினமான மலைப்பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள் போன்ற இடங்களில் தேர்தல் பணிக்கு செல்லும் அனைவருக்கும் காப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும். இதுபோன்ற இடங்களில் பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்தவே நான் இந்த பயணம் மேற்கொண்டேன்.

எளிதில் அணுக முடியாத துமக் பகுதியில் கஷ்டப்பட்டு வந்து மக்கள் வாக்களிக்கின்றனர். நாட்டின் மற்ற நகரங்களில் உள்ள வாக்காளர்களுக்கு அவர்கள் எடுத்துக் காட்டாக உள்ளனர். இவ்வாறு ராஜீவ் குமார் கூறினார்.

மலையேற்றத்தில் ஆர்வம் உள்ளவர் ராஜீவ் குமார். ஏற்கெனவே, இமயமலை சென்று வந்துள்ளார். -பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x