Last Updated : 28 May, 2016 09:00 PM

 

Published : 28 May 2016 09:00 PM
Last Updated : 28 May 2016 09:00 PM

5-ம் வகுப்பு வரை பெயில் கிடையாது என்று மாற்ற வேண்டும்: சுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரை

தற்போது அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் செய்யக் கூடாது என்ற நடைமுறை 5-ம் வகுப்பு வரை பெயில் செய்யக்கூடாது என்பதாக மாற்றப்பட வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையை வகுக்க அமைக்கப்பட்ட சுப்பிரமணியன் கமிட்டி பரிந்துரை மேற்கொண்டுள்ளது.

அதே போல், உயர்கல்வியில் தரம் உயர்வதற்கு அயல்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவும் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. 200 பக்க அறிக்கையில், ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை செய்ய வேண்டிய மாற்றங்கள் ஏராளமாக உள்ளதாக இந்த கமிட்டி கூறியுள்ளது.

6-ம் வகுப்பு முதல் தேர்வுகள் நடைபெற வேண்டும், மாணவர்கள் முதல் சந்தர்ப்பத்தில் தேர்ச்சி பெறவில்லையெனில் அவர்களுக்கு மேலும் 2 வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள கமிட்டி நுழைவுத் தேர்வுகளில் கோச்சிங் கிளாசஸ்களின் தாக்கம் பற்றி தனி அத்தியாயமே ஒதுக்கியுள்ளது.

உலக அளவில் டாப் தரவரிசையில் இந்திய கல்வி நிலையங்கள் இடம்பெறும் வகையில் அயல்நாட்டு உயர்தர கல்வி நிறுவனங்களை இந்தியாவுக்குள் முறையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும் என்று கமிட்டி மேலும் பரிந்துரை செய்துள்ளது.

அதே போல் திறன் வளர்ப்பு, விடுமுறை கால பயிற்சிகள் குறித்தும் இந்த அறிக்கையில் பல முக்கியமான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யு.ஜி.சி, ஏ.ஐ.டி.சி. அடங்கிய தொழில்நுட்பக் கல்விக்கான கட்டுப்பாட்டு முறைகள் தேவை என்பதோடு, தற்போதைய தொழில்நுட்ப சவால்களைச் சந்திக்கும் விதமாக தொழில்நுட்பக் கல்வி அமையவும் பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது.

அரசு அமைத்த இந்தக் குழுவில் சுப்பிரமணியன் தவிர, டெல்லி அரசின் முன்னால் தலைமைச் செயலர் ஷைலஜா சந்திரா, டெல்லி அரசின் முன்னாள் உள்துறைச் செயலர் சிவராம் சர்மா, குஜராத் முன்னாள் தலைமைச் செயலர் சுதிர் மன்கட், முன்னாள் என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் ஜே.எஸ்.ராஜ்புட் ஆகியோரும் இந்த குழுவில் அடங்குவர்.

அனைவருக்கும் கல்வியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்ட போது 8-ம் வகுப்பு வரை பெயில் போடக்கூடாது என்று சட்டம் கொண்டு வரப்படக் காரணம், பள்ளிக்கு மேலும் குழந்தைகளை வரவேற்க ஊக்குவிக்கவும், பெயில் போன்ற காரணங்களால் அதிக அளவில் மாணவ, மாணவிகள் பாதியிலேயே கல்வியை விட்டுச் செல்லும் அவலம் தடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் கொண்டு வரப்பட்டது.

தற்போது கல்வித்தரத்தைக் காரணம் காட்டி சுப்பிரமணியன் கமிட்டி 8-ம் வகுப்பு வரை பெயில் கூடாது என்பதை 5-ம் வகுப்பு வரை என்று மாற்றுமாறு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x