Published : 17 May 2022 05:51 PM
Last Updated : 17 May 2022 05:51 PM

2ஜி சகாப்தம் ஊழலின் அடையாளம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி மறைமுக சாடல்

புதுடெல்லி: 2ஜி சகாப்தம் என்பது ஊழலின் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது பயன்படுத்தும் 4ஜி நாடு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள ஏதுவாக உள்ளது என முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார்.

தொலைத்தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’ வெள்ளிவிழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். ட்ராய் வெள்ளி விழாவில் அஞ்சல்தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும் சென்னை ஐஐடி நிறுவனத்தின் தலைமையில் 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 5-ஜி சோதனை கருவியை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக உள்ளது. ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தால் இந்தியாவில் தொலைத்தொடர்பு டேட்டா கட்டணங்கள் மலிவாக உள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை இரண்டில் இருந்து 200 ஆக அதிகரித்துள்ளது.

கிராமங்களுக்கு 5ஜி தொழில் நுட்பத்தை கொண்டு செல்வதில் இது பெரும் பங்கு வகிக்கும். நாம் சுயமாக தயாரித்த 5ஜி தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் முக்கியமாக மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கான தன்னிறைவுக்கான ஒரு முக்கியமான படியாகும்.

21-ம் நூற்றாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை தொலைத்தொடர்பு தீர்மானிக்கும். 5-ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அடுத்த 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை ரூ.34 லட்சம் கோடியாக உயர்த்தும். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் ஆட்சி, வாழ்வின் எளிமை, வணிகம் போன்றவற்றிலும் சாதகமான மாற்றங்களை கொண்டுவர போகிறது.

இது விவசாயம் சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கும். இதன் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும்.

2ஜி சகாப்தம் என்பது ஊழலின் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது பயன்படுத்தும் 4ஜி நாடு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள ஏதுவாக உள்ளது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவர இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x