Published : 17 May 2022 05:05 PM
Last Updated : 17 May 2022 05:05 PM

வட கொரிய கரோனா அப்டேட்ஸ்: மக்களிடம் மருந்துகளை சேர்க்கும் ராணுவம், ‘நோ’ தடுப்பூசி முகாம்கள்

வட கொரியா என்றால் ராணுவ பலமும் அணு ஆயுத சோதனைகளும்தான் நினைவுக்கு வரும். மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் கூட வட கொரியா தனது ராணுவ பராக்கிரமங்களை விளக்கும் சோதனைகளைக் கைவிடவில்லை.

கரோனா பரவலால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களிடம் மருந்துகளைக் கொண்டு சேர்க்க ராணுவத்தையும், 10,000 சுகாதாரப் பணியாளர்களையும் வட கொரியா களமிறக்கியுள்ளது. இது தொடர்பாக வட கொரிய அரசு ஊடகமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி இன்று (மே 17) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவில் அன்றாடம் 2,69,510 பேருக்கு காய்ச்சல் மற்றும் கரோனா நோய் அறிகுறிகள் தென்படுகின்றன. இதுவரை மொத்தம் 1.48 மில்லியன் பேருக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லாமே காய்ச்சல் மரணங்கள் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளன. எத்தனை பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எத்தனை பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர் போன்ற தகவல்கள் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதேபோல் தடுப்பூசி முகாம்கள் எதையும் அரசு முன்னெடுக்கவில்லை. மாஸ் டெஸ்டிங் எனப்படும் அதிகளவிலான கரோனா சோதனைகளை மேற்கொள்ளவும் வட கொரிய அரசு முனைப்பு காட்டவில்லை. ஆனால், கரோனா தொற்று எப்படி வட கொரியாவுக்குள் வந்தது என்ற தொடர்பு கண்டறிதலில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், தென் கொரியா ஹாலிம் மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர் லீ ஜே கேப், "வட கொரியாவில் எத்தனை பேருக்கு இதுவரை கரோனா பாதித்துள்ளது என்ற உறுதியான தகவல் இல்லை. ஆனால் காய்ச்சலுடன் இருக்கும் மக்களின் எண்ணிக்கை உண்மையிலேயே வருந்தச் செய்கிறது. நாட்கள் செல்லச்செல்ல உயிர் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கலாம், ஆனால் அரசு அந்த எண்ணிக்கையை அரசியல் சூழல் கருதி குறைத்தே தெரிவிக்கும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், அதிபர் கிம் ஜோங் உன்னின் உத்தரவுக்கு இணங்க, ராணுவ மருத்துவக் குழுக்கள் மக்கள் பணியில் களமிறக்கப்பட்டுள்ளன. மக்களிடம் மருந்துகள் சரியாக சென்று சேரும். விரைவில் இந்த பொது சுகாதாரப் பிரச்சினை செயலிழக்கச் செய்யப்படும் என்று ராணுவ பாணியில் அரசு விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அதிபர் கிம் ஜோங் கூறியிருந்ததைத் தொடர்ந்து ஆளுங்கட்சி தலைவர்களே நேரில் சென்று மருந்துகள் இருப்பை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

கரோனா தடுப்பூசி திட்டத்தை மதித்து செயல்படாத வட கொரியாவில் வைரஸ் பல்கிப்பெருக வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆனாலும், சர்வதேச நாடுகளின் உதவிகளே எங்களுக்குத் தேவையில்லை என்று அதிபர் கிம் திட்டவட்டமாகக் கூறிவருகிறார்.

வட கொரியாவில் இப்போதைக்கு வலி நிவாரணிகள், இபுப்ரோஃபன், அமாக்சிலின் போன்ற மருந்துகளே காய்ச்சல் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவை நோய் அறிகுறிகளுக்கான மருந்துகளே தவிர வைரஸைக் கொல்லும் மருந்துகள் இல்லை. இவை தவிர உப்புத் தண்ணீர் கொப்பளித்தல் போன்ற பாழக்கங்களை மேற்கொள்ள மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

அண்டை நாடான தென் கொரியா நேற்று (திங்கள்கிழமை) மருந்துகள், தடுப்பு மருந்துகள், முகக்கவசம், கரோனா சோதனை உபகரணங்கள் அனுப்பத் தயார் எனத் தெரிவித்தது. ஆனால், தென் கொரியாவின் உதவிக்கரத்தை வட கொரியா இதுவரை ஏற்கவே இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x