Published : 03 Jun 2014 08:30 AM
Last Updated : 03 Jun 2014 08:30 AM

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பெயரை மாற்றுகிறார் மோடி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பெயரை, ’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்’ என மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து தி இந்துவிடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறியபோது, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மத்திய அரசின் கோப்புகளிலும் இதே பெயரில் குறிப்பிடப்படுகிறது. இதில் ஜம்முவின் சில பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டின் தனி அந்தஸ்து பெற்ற மாநிலத்தைப்போல் அந்தப் பகுதியையும் “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர்’ என அழைக்க வேண்டும் என பிரதமர் முடிவு செய்துள்ளார்’ எனக் கூறுகிறார்கள்.

இந்த முடிவு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக இருப்பதாகவும் இதன்மூலம் முழு உண்மையையும் பிரதமர் இந்த உலகிற்கு தெரிவிக்க எண்ணுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வாக்கு அரசியல்

இது குறித்து தி இந்துவிடம் நகரின் மூத்த பத்திரிகையாள ரான ஜாவித் நர்வாரி உசைன் தொலைபேசியில் பேசியபோது, ’இந்த பெயர் மாற்றத்தினால் எந்த மாற்றமும் உருவாகப் போவ தில்லை. பாரதிய ஜனதாவிற்கு முதன்முறையாக இங்குள்ள ஆறில் மூன்று எம்.பி. தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. அந்த வாக்குவங்கியைத் தக்க வைக்கும் முயற்சி இது’ எனத் தெரிவித்தார்.

காஷ்மீர் பண்டிட்கள்

இத்துடன் ஜம்மு-காஷ்மீரில் இருந்து 1990-ல் வெளியேற்றப் பட்டதாகக் கருதப்படும் அதன் பூர்வ குடிகளான காஷ்மீரப் பண்டிட்களை மீண்டும் அங்கு குடியேற்ற மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வரலாறு

ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதி யில் அமைந்துள்ள பெரும் பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள இப்பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.

முசாபராபாத்தை தலைநகராக கொண்ட இந்தப் பகுதியில் நமது நாட்டின் சட்டமன்றத் தொகுதி அளவில் 49 தொகுதிகள் அமைந் துள்ளன. இதன்மூலமாக பிரதமர் மற்றும் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இங்கு தனியாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது. இருப்பினும் அவை பாகிஸ்தான் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியை பாகிஸ்தானில் ‘ஆசாத் காஷ்மீர் (சுதந்திரம் பெற்ற காஷ்மீர்)’ என அழைக்கின்றனர். இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x