Published : 28 May 2016 01:46 PM
Last Updated : 28 May 2016 01:46 PM

இரண்டு ஆண்டு கண்ணீரும் புதிய ஆரம்பமும்: மோடி ஆட்சியை முன்வைத்து ட்விட்டரில் சொற்போர்!

இரண்டு ஆண்டுகளில் கண்ணீர் மட்டுமே மிச்சம் (#2yearsonlytears), மோடி ஆட்சியை விமர்சித்து இப்படி ஒரு ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. அதேபோல் மோடிக்கு ஆதரவாக #eknayisubahwithnamo என்ற ஹேஷ்டேக் டிரண்டாகி வருகிறது.

பிரதமர் நரேந்தர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி மே 26-ம் தேதியுடன் இரு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை பாஜக நடத்தி வருகிறது. இந்த கொண்டாட்டம் ஒரு புறம் இருக்க இரண்டு ஆண்டுகளில் கண்ணீர் மட்டுமே மிச்சம் (#2yearsonlytears) என்ற ஹேஷ்டேகை உலாவவிட்டிருக்கிறார்கள் ட்வீட்டாளர்கள்.

மோடி அரசு என்ன செய்தது? என்ற தொனியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரும், மாணவர்களும் மோடி ஆட்சியில் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

அவ்வாறு ட்விட்டரில் பதிவான சில சுவாரஸ்ய கருத்துகளின் தொகுப்பு:

@Naveennsui

ஓராண்டில் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றீர்களே 1%-க்கும் குறைவான வேலை வாய்ப்புகளே ஏற்படுத்தப்பட்டுள்ளன? வேலை எங்கே மோடி?

@Raju

2 ஆண்டுகளாக சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர், விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர், சட்டத்தை வளைக்கும் குண்டர்கள் குதூகலமாக இருக்கிறார்கள், மாணவர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்

@LaraibNeyazi

வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் கருப்புப் பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதா?

@albinkumblani

வியாபம் ஊழல் வழக்கு தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் மர்மமாக இறந்துள்ளனர். ஆனால், மோடி அரசு நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது.

@gs_sodhi

அமைதி இல்லை, வேலை இல்லை, பொருளாதார வளர்ச்சி இல்லை, மோடி சொன்ன நல்ல நாள் இன்னும் வரவில்லை. ரொட்டிகூட ஆடம்பரத்தின் அடையாளமாகிவிட்டது.

கருத்துகள் மட்டுமல்லாது மீம்ஸ் மூலமும் மோடி அரசு விமர்சிக்கப்பட்டுள்ளது. மோடியை விமர்சிப்பவர்களுக்கு போட்டியாக மோடியை ஆதரித்தும் ஒரு தரப்பினர் ட்விட்டரில் களமிறங்கியுள்ளனர். #eknayisubahwithnamo என்ற ஹேஷ்டேகின் கீழ் மோடி அரசின் சாதனைகள் என பட்டியலிட்டு வருகின்றனர் சிலர். அவற்றில் சில:

@samgold

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டது பழைய வரலாறாகிவிட்டது.

@Joydeep_Moitra

இந்திய ரயில் பெட்டிகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ரயில்களுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என மோடி அரசு அறிவித்துள்ளது. சர்வதேச தரத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம்.

@saaxenanurag

இரண்டு ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி... முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட பல மடங்கு சிறப்பானது.

@RamraoKP

உண்மை. உங்களது ஒரு ட்வீட்டைப் பார்த்து ரயில் பயணிகள் உதவிக்கு வருவார் அமைச்சர் சுரேஷ் பிரபு. மாற்றத்தை உணருங்கள்.

@gsmutha

மோடி விடுமுறையை கழிக்க வெளிநாடு செல்லவில்லை.. இந்திய நலனுக்காக வெளிநாடு செல்கிறார்.

ட்விட்டரில் தமிழ் சினிமா ஹீரோக்களின் ரசிகர்கள் போட்டாபோட்டி போட்டு தங்களது ஹீரோவை டிரெண்டாக்குவது போல் அதே மெனக்கிடுதலுடன் மோடி அரசின் இரண்டு ஆண்டுகள் ஆட்சியை வரவேற்றும் தாக்கியும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x