Last Updated : 31 Mar, 2022 12:30 PM

 

Published : 31 Mar 2022 12:30 PM
Last Updated : 31 Mar 2022 12:30 PM

மீனவர் பிரச்சினை | மத்திய அரசுடனான தமிழக உறவு மோசமாகும்: அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் அச்சம்

அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் | கோப்புப் படம்

புதுடெல்லி: இலங்கை அரசால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்து மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் பேசினார். அப்போது அவர், மீனவர்கள் பாதிப்பால் மத்திய, தமிழக அரசுகளுக்கு இடையிலான உறவு மோசமடையலாம் என அச்சம் தெரிவித்தார்.

இது குறித்து மக்களவயில் தேனி தொகுதி எம்.பி.யான பி.ரவீந்திரநாத் பேசியதாவது: ”இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் நமது மீனவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்களை நான் இங்கு முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். கடந்த 2022 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் மட்டுமே தமிழக மீனவர்கள் மீது பல தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கச்சத்தீவை மீட்பதற்கும், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பதற்கும் அரசு முனைப்பான கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேசமயம், இலங்கைக் கடல் பரப்புக்குள் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன் பிடிக்க உரிமம் பெற்ற இந்திய மீனவர்களை அனுமதிக்குமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கம் முன்மொழிய வேண்டும். மீனவர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, மத்திய, மாநில அரசுகள் இணைந்து நஷ்டஈடு நிதி ஒதுக்கி, மாற்று வழிகளைத் தேர்வு செய்ய விரும்பும் மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்களின் பிரச்சினைகளில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் தமிழகத்துக்கும், புது தில்லிக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்து, நெருக்கடியான சூழ்நிலை ஏற்படலாம். எனவே, கடல் வளத்தை மேம்படுத்தவும், குறிப்பாக, தமிழகக் கடலோர மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர உங்கள் மூலம் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

சி.ஏ கல்வியில் பெண்களுக்கானப் பிரிவை அதிகரிக்க வேண்டும்

பட்டய கணக்காளர்கள், செலவு மற்றும் வேலை கணக்குகள் மற்றும் நிறுவன செயலாளர்கள் திருத்த மசோதா மீது அதிமுக எம்.பியான பி.ரவீந்திரநாத், மக்களவையில் பேசினார். அப்போது அவர், சி.ஏ எனப்படும் கணக்கு தணிக்கையாளர் கல்வியில் பெண்களுக்கானப் பிரிவை வலுப்படுத்த வேண்டும் எனக் கோரினார்.

மேலும் அவர் பேசும்போது, ”தணிக்கையாளர்கள், கணக்காளர்கள் மற்றும் நிறுவனச் செயலாளர்கள் கார்ப்பரேட் நிர்வாகத்தின் முதல் நுழைவாயில்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும், எங்களது சட்டக் கட்டமைப்பு இந்த அமைப்பில் கணிசமான நம்பிக்கையும் வைத்திருக்கிறது.

ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் கணக்கியலில் உலகளவில் தகவமைக்கக் கூடிய கல்வி முறையை உருவாக்குவது தொடர்பாக சில பரிந்துரைகளை முன்மொழிய விரும்புகிறேன்.

முதலாவதாக, ஐசிஏஐ என்பது உலகின் இரண்டாவது பெரிய தொழில்முறை கணக்கியல் அமைப்பு மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய தொழில்முறை கணக்கியல் அமைப்பாகும். இது முழுக்க முழுக்க சுயநிதி மற்றும் சுயநிலையான மாடலில் செயல்படுகிறது.

இந்த நிறுவனம் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 165 கிளைகளைக் கொண்டுள்ளது. வெளிநாடுகளில் சுமார் 40 சாப்டர்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களாக உயர்த்த வேண்டும்.

இதை இண்டர் தேர்ச்சி பெற்ற பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கு டிப்ளமோ போன்ற ’வேலைவாய்ப்புச் சான்றிதழ்கள்’ வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அதனால், பயிற்சி பெற்ற நிபுணர்களின் பெரிய அளவிலான பற்றாக்குறையை தீர்க்க முடியும்.

ஐசிஏஐயின் நிர்வாக மற்றும் கல்வி அதிகார வரம்புக்கு உள்பட்ட தற்போதைய அமைப்புக்குள் உள்கட்டமைப்பு மற்றும் நிதி ஏற்கெனவே இருப்பதால், பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கான கூடுதல் முதலீடு மற்றும் பணியமர்த்தல் தேவையில்லை.

இரண்டாவதாக, எதிர்காலக் கணக்காளர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம், உலகமயமாக்கல் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் விதிமுறைகள் உள்ளிட்ட பலவற்றில் கூடுதல் கல்வி தேவைப்படும்.

சந்தேகத்துக்கு இடமின்றி, எதிர்காலக் கணக்காளர் மாறிவரும் தொழில் துறைக்கு ஏற்றவாறு தொழில்நுட்ப ரீதியாக ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். இந்த மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, நமது பயிற்சி மற்றும் ஒழுங்குமுறை பொறிமுறையும் (Regulatory Mechanism) உறுதி செய்யப்பட வேண்டும். மூன்றாவதாக, பெண்கள் பங்கேற்பைப் பொருத்தவரை, பிராந்திய மற்றும் மத்திய கவுன்சிலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சி.ஏ. தொழிலில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதால், பெண்களுக்கான பிரிவுகளை வலுப்படுத்த வேண்டும்

பெண் உறுப்பினர்களின் வேலை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில், அவர்களுக்கு உதவ வேண்டும். ஐ.சி.ஏ.ஐ.இன் பெண்கள் அதிகாரமளிக்கும் குழுவின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்ற, அது முன்னுரிமையில் எடுக்கப்பட வேண்டும்.

ஒழங்குமுறைப் பொறிமுறையைக் கடுமையாக்கவும், பட்டயக் கணக்காளர்கள், நிறுவனச் செயலாளர்கள் மற்றும் செலவு கணக்காளர்களின் செயல்பாட்டை நெறிப்படுத்தவும், இந்த மசோதா நிறுவனங்களின் நிர்வாக மற்றும் ஒழுங்குமுறை நிலைகளுக்கு இடையே உள்ள நலன்களுக்கான பிரச்சினைகளைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 90 நாள்கள் என்ற இந்த நிலையான காலக்கெடுவின் மூலம் தொழில் வல்லுநர்களின் ஒழுங்கு விஷயங்களில் விரைவான முடிவெடுப்பதற்கும் இது எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவின் மூலம் நோக்கமாக உள்ள நடவடிக்கைகளை நான் ஆதரிக்கிறேன்” என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x