Published : 31 Mar 2022 11:17 AM
Last Updated : 31 Mar 2022 11:17 AM

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்

புது டெல்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்பிரிவுக்குள் வரும் வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 35 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களில், ‘தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம். முந்தைய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வாக்குக்காக வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது. எனவே, அந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், "இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஏற்கெனவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில சட்டப்பேரவை முடிவெடுக்க முடியுமா? சாதி வாரியாக எந்த கணக்கெடுப்பும் இல்லாமல் இது போன்ற உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு பிரிவுக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியுமா எனப் பல கேள்விகள் உள்ளன.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு மட்டும் உள் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்திருந்தது" என்று தெரிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் உள் இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x