Last Updated : 13 Apr, 2016 12:59 PM

 

Published : 13 Apr 2016 12:59 PM
Last Updated : 13 Apr 2016 12:59 PM

காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் பலி 3 ஆக அதிகரிப்பு: பாரிக்கர் உடன் மெகபூபா ஆலோசனை

காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ராஜா பேகம் (70) என்ற பெண் இன்று (புதன்கிழமை) பலியானார். இதனையடுத்து காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

பதற்றமான சூழல் நிலவுவதால் ஹண்ட்வாரா, குப்வாரா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரிலும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது போன்ற சூழலே நிலவுகிறது. பிரிவினைவாத தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் உள்ளனர்.

இதற்கிடையில் மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கருடன் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஹண்ட்வாரா சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் என்னிடம் உறுதியளித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது" என்றார்.

துப்பாக்கிச் சூடு ஏன்?

காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா நகரில் பள்ளிக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய மாணவியை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர், பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது, பாதுகாப்புப் படையினர், அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்திருக்கின்றனர். அந்த இளைஞர்கள் அங்கிருந்து செல்லாத காரணத்தால், அவர்களை விரட்டி அடிக்கும் நோக்கில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். தற்போது மூன்றாவதாக பெண் ஒருவரும் பலியானார்.

விசாரணைக்கு உத்தரவு:

இதற்கிடையில் சம்பவம் குறித்து ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி தான் எவ்வித பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை எனக் கூறும் வீடியோ ஒன்றை ராணுவம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ போலீஸ் காவலில் எடுக்கப்பட்டதால், அதில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x