Last Updated : 20 Apr, 2016 09:39 AM

 

Published : 20 Apr 2016 09:39 AM
Last Updated : 20 Apr 2016 09:39 AM

காஷ்மீரில் 4 மணி நேரம் கட்டுப்பாடு தளர்வு: மாணவி மானபங்க விவகாரத்தில் ஒருவர் கைது

காஷ்மீரில் ஹந்த்வாரா நகரில் நேற்று நான்கு மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. அதேசமயம் குப்வாரா, திரெஹாம் நகரங்களில் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன.

இதனிடையே, வன்முறை ஏற்படுவதற்குக் காரணமான, மாணவி மானபங்க விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காஷ்மீரில் கடந்த 12-ம் தேதி பள்ளி மாணவி ஒருவர் ராணுவ வீரரால் மானபங்கம் செய்யப் பட்டதாக பரவிய தகவலை அடுத்து பெரும் போராட்டம் வெடித்தது. இப்போராட்டம் வன் முறையாக மாறியதால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 5 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து குப்வாரா, ஹந்த்வாரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மானபங்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட மாணவி, முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் அளித்த சாட்சியத்தில், தன்னை ராணுவத்தினர் மானபங்கம் செய்யவில்லை என்றும், இரு உள்ளூர் இளைஞர்கள்தான் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட இருவரின் பெயரையும் அம்மாணவி தெரிவித்தார். அதில், ஹிலால் அகமது பாண்டே என்பவரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பெரும் வன்முறைக்கு வித்திட்ட இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு மாணவரையும் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பதுங்கு பாசறை

பெண் மானபங்கம் செய்யப்பட்டதாக தகவல் பரவியதும் ஹந்த்வாரா சந்தையில் உள்ள ராணுவத்தின் மூன்று பதுங்கு பாசறைகள் (பங்கர்) மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். அந்த பாசறைகளைக் காலி செய்ய வேண்டும் என உள்ளூர் வாசிகள் வலியுறுத்தினர். இதற்கு ராணுவம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் அந்த பதுங்கு பாசறைகளைக் காலி செய்ய ராணுவத்தினர் ஒப்புக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் அவற்றைக் காலி செய்தது. விரைவில் அவை இடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வு

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டிருந்த ஹந்த்வாராவில் காலை 8 மணி முதல் 12 மணி வரை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்த சமயத்தில் வன்முறை ஏதும் நிகழவில்லை. சூழ்நிலையைப் பொறுத்து, கட்டுப்பாடு தளர்வு நீட்டிக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

அதேசமயம், குப்வாரா, திரெஹாம் நகரங்களில் கட்டுப் பாடுகள் தொடர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x