Published : 24 Feb 2022 01:50 PM
Last Updated : 24 Feb 2022 01:50 PM

ரஷ்யா - உக்ரைன் போர் | மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்: ஐ.நா. கூட்டத்தில் இந்தியா அச்சம்

ஜெனீவா: "ரஷ்யா - உக்ரைன் மோதல், மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்" என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

உக்ரைன் - ரஷ்யா நிலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் இன்று கூடியது. ஒரே வாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரண்டாவது முறையாக கூடியது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தை தணிக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டபோதே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டினார்.

அந்த வேளையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் பேசிய இந்தியப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி ,"உடனடியாக இருதரப்பும் படைகளைத் திரும்பப் பெற வேண்டும். பதற்றமான சூழலைத் தணிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அங்கு தற்போதுள்ள சூழலைப் பார்க்கும்போது இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட அனைவரின் பாதுகாப்புமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

உக்ரைனில் மாணவர்கள் உள்பட 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அவர்களை பாதுகாப்பாக தாயகம் திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதற்கிடையில், உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள் பலரும் தூதரகத்தைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், விமானங்கள் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்குமிடத்திலேயே என்று தெரிவித்துள்ளனர்.

கீவ் விமானநிலையத்தில் காத்திருக்கும் மக்கள்

தாக்குதல் தொடங்கி சுமார் 4 மணி நேரமே ஆகியிருக்கும் சூழலில், உக்ரைன் எல்லைக்குள்ளேயே நுழைந்து தற்போது தாக்குதலை நடத்தி வருகின்றன ரஷ்யப் படைகள். உக்ரைன் விமானப்படை கட்டமைப்பை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

டெல்லியில் ஆலோசனை: இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் வெளியுறவு அமைச்சகம் சார்பில் அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக மாணவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதற்காக அங்குள்ள இந்தியர்கள் எந்தெந்த பகுதிகளில் உள்ளனர், அவர்களை எப்படி ஒருங்கிணைத்து மீட்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x