Published : 14 Feb 2022 09:27 AM
Last Updated : 14 Feb 2022 09:27 AM

2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-52! வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

படம்: பி.ஜோதிராமலிங்கம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று (பிப்.14) காலை விண்ணில் சீறிப் பாய்ந்தது. 2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

வெற்றிகரமான நிலைநிறுத்தம்: மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்து அனுப்பக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், ”இஓஎஸ்-04 முதன்மை செயற்கைக்கோள் வெற்றிகரமாக துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அத்துடன் அனுப்பப்பட்ட மற்ற செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும்'' என்றார்.

சோம்நாத் கடந்த ஜனவரி மாதம், இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற பின்னர் ஏவப்பட்டுள்ள முதல் செயற்கைக்கோள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோள்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களை தயாரித்து அவற்றின் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அண்மைக்காலமாக ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வந்தன. ஆனால், கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக கடந்த ஆண்டு செயற்கைக்கோள் ஏவும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

— ISRO (@isro) February 13, 2022

இந்த ஆண்டு பிஎஸ்எல்வி வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்விசி-52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ மும்முரமாக இறங்கியது. அதன்படி, இஓஎஸ்-04 என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-2டிடி தொழில்நுட்ப செயற்கைக்கோள், பெங்களூரு இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் கொலோரேடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய இன்ஸ்பையர்சாட்-1 என்ற மாணவர் செயற்கைக்கோள் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று (பிப்.14) காலை, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. 2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x