Published : 02 Feb 2022 03:40 PM
Last Updated : 02 Feb 2022 03:40 PM

100 நாள் வேலைத் திட்டம்: ஏழைகளை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?

புதுடெல்லி: 2022 - 23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலாகிவிட்டது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி (கிரிப்டோ வரி) உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் என ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த பட்ஜெட் சலுகைகளை வாரி வழங்கும் 'பாப்புலிஸ்ட்' பட்ஜெட்டாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், அப்படியான அறிகுறி எதுவும் தென்படவில்லை. அதைத்தாண்டி பட்ஜெட்டில் ஓர் அதிர்ச்சித் தகவல் உள்ளது.

மாறாத நிதி ஒதுக்கீடு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) கடந்த 2021 - 22ஆம் ஆண்டில் ரூ.73,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.98,000 கோடியாவது ஒதுக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டும் அதே ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட நிதியின் அளவைவிட 25.5% குறைவு.

இன்னும் சொல்லப்போனால் பட்ஜெட் உரையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பைக்கூட நிதியமைச்சர் வாசிக்கவில்லை. தற்போது அந்தக் குட்டு வெளிப்பட்டுவிட்ட நிலையில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட செயற்பாட்டாளர்களும், பாஜக ஆட்சி அல்லாத மாநிலத் தலைவர்களும் இதற்கு கோப ஆவேசத்துடன் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 100 நாட்கள் வேலையை உறுதிப்படுத்துவதால் கிராமப்புறங்களில், அதுவும் குறிப்பாக எந்தவித குறிப்பிட்ட திறனும் பெற்றிராத பாமர மக்களுக்கு வாழ்வாதாரம் உறுதியாகிறது எனக் கூறுகின்றனர் இதனை ஆதரிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள்.

100 நாட்கள் வேலைத் திட்டம்தான் கரோனா காலகட்டத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தை வீழ்ந்துவிடாமல் பாதுகாத்து, கோடிக்கணக்கானவர்களைப் பட்டினிக் கொடுமையிலிருந்து காப்பாற்றியுள்ளது. கரோனா முதல் அலை ஊரடங்கின்போது, நாடு முழுவதும் 11 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கியது. அந்தவேளையில் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டது. மத்திய அரசு 2017-18 நிதியாண்டில் இத்திட்டத்துக்கு ரூ.48,000 கோடி மட்டுமே ஒதுக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட்டில், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் ஏதுமில்லை என்பது ஒருபுறமிருக்க, இன்று வரை பழைய ஊதிய பாக்கியில் பலரும் வஞ்சிக்கப்பட்டிருப்பது இன்னொரு சர்ச்சையாக உள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்தத் திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க, மாநிலப் பங்களிப்பாக கூடுதல் நிதியை வழங்கியிருக்கிறது.

மாநிலங்கள் கூடுதல் நிதி ஒதுக்கினாலும் கூட, அடித்தட்டு மக்கள் நேரடியாகப் பயனடையக்கூடிய இந்தத் திட்டத்திற்கான நிதியை முடக்கி மீண்டும் மத்திய அரசு வஞ்சித்துள்ளதாக பரவலாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கேரளாவின் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறுகையில், "நாடு மிக மோசமான வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தை சந்திக்கும் இவ்வேளையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டைப்போலவே வஞ்சித்துள்ளது. இந்தப் பற்றாக்குறை நிதியை வைத்துக் கொண்டு ஏற்கெனவே தொடங்கிய பணிகளைக் கூட முடிக்க இயலாது" என்று கூறினார்.

மேற்கு வங்க முதல்வரின் முன்னாள் முதன்மை ஆலோசகரான அமித் மித்ரா கூறுகையில், "இது மிகவும் மோசமான நடவடிக்கை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இதுதான் 'மோடி வளர்ச்சி மாதிரி'" என்றார்.

சமூக செயற்பாட்டாளர்களோ, "தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை தொடர்ந்து குறைப்பது, அதை நம்பியுள்ள சாமானிய மக்களை வஞ்சிக்கும் செயல்" என்று கூறியுள்ளனர்.

"அரசாங்கம் பட்ஜெட் ஏன்ற பெயரில் ஒரு சட்டத்தை கொலை செய்கிறது" என்று மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதனின் நிறுவனர் நிகில் டே கூறியிருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஊரக பொருளாதார நிபுணர் ஹிமான்சு, "அரசின் வஞ்சனை, கிராமப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும்" எனக் கூறியுள்ளார்.

இந்தியா ரேட்டிங்க்ஸ் என்ற அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணர் டி.கே.பண்ட் கூறுகையில், "ஊரடங்கு காலத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நிச்சயமாக பொருளாதாரத்தைப் பாதுகாத்தது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், இப்போது பொருளாதாரம் மீண்டு வரும் சூழலில் இனியும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் வேலைக்கான தேவை அதிகமாக எழாது என்பதே நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், இப்போதும் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக இல்லை. ஒருவேளை தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைக்கான தேவை அதிகரித்தால், அப்போது அரசு துணை நிதியை வழங்கும்" என்று கூறினார்.

100 நாள் வேலைத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காகததால் ஏழைகள் வஞ்சிக்கப்படுவதாக தற்போது பரவலாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல் எழுந்து வருகிறது.

கட்டுரை ஆதாரம்: பிரிஸில்லா ஜெபராஜ், சோபனா கே.நாயர் ( தி இந்து ஆங்கில நாளிதழ்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x