Published : 02 Feb 2022 08:20 AM
Last Updated : 02 Feb 2022 08:20 AM
புதுடெல்லி: மக்கள் நலன் சார்ந்ததாகவும், வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டதாகவும் 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அமைந்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: மக்களுக்கு சாதகமான, மக்கள் நலன் சார்ந்த,முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாராட்டுகிறேன். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய நம்பிக்கைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. நமது நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது.
அதிக உள்கட்டமைப்பு, அதிக முதலீடு, அதிக வளர்ச்சி மற்றும் அதிக வேலைகள் என்ற கொள்கையை இந்த பட்ஜெட் பின்பற்றி அமைந்துள்ளது. பசுமை வேலைகளுக்கான புதிய ஏற்பாடும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்று உள்ளது. இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை இந்த பட்ஜெட் உறுதி செய்கிறது.
நாட்டிலேயே முதன்முறையாக, இமாச்சலபிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு - காஷ்மீர், வடகிழக்குமாநிலங்கள் போன்ற பகுதிகளுக்கு'பர்வத் மாலா' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மலைகளுக்கிடையில் நவீன போக்குவரத்து மற்றும்இணைப்பு முறையை எளிதாக்கும்.இதன்மூலம் எல்லையோர கிராமங்களுக்கு பலமும், பலனும் கிடைக்கும்.
கரோனா பெருந்தொற்று ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி வரும்இந்தக் கால கட்டத்தில் வளர்ச்சிக்கான புதிய நம்பிக்கையை இந்தபட்ஜெட் கொண்டு வந்துள்ளது. இந்த பட்ஜெட்டால் நாட்டின் பொருளாதாரம் வலுவடையும். மேலும், ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
ஏழை மக்கள் ஒவ்வொருக்கும் நல்ல தரமான வீடு, குடிநீர் குழாய் வசதி, கழிப்பறை, சமையல் காஸ் வசதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தொலைநோக்குப் பார்வை கொண்டது. அவருக்கு எனது பாராட்டுக்கள். இந்த பட்ஜெட் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவை உலகின் முன்னணி பொருளாதாரமாக மாற்ற உதவும்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: இந்த பட்ஜெட் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இது புதிய இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்கும். 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர்: பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள கல்விக்கான தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. கல்வி சேவைக்காக 100 சேனல்களை உருவாக்குவது சிறப்பம்சமாகும்.
இதன்மூலம் டிஜிட்டல் கல்வித் திட்டத்தின் கீழ் கல்விச் சேவையை தொலைதூர பகுதிகளுக்கும் கொண்டு செல்லலாம். இதனால் அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்கும்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT