Published : 31 Jan 2022 07:06 PM
Last Updated : 31 Jan 2022 07:06 PM

மலையாள செய்தி சேனலின் அனுமதியை ரத்து செய்த மத்திய அரசு - சிஏஏ விவகாரம் காரணமா?

கேரளா: மலையாள தொலைக்காட்சி செய்தி சேனலான மீடியாஒன் டிவியின் ஒளிபரப்பு மத்திய அமைச்சகத்தின் அனுமதி மறுப்பால் தடைபட்டுள்ளது. ஏற்கெனவே 2020-ம் ஆண்டு இதே சேனலின் ஒளிபரப்பு மத்திய அரசால் தடைபட்டது. இப்போது மீண்டும் தடைப்பட்டிருப்பதால் சர்ச்சைகள் உருவெடுத்துள்ளன.

மலையாள செய்தி சேனலான மீடியாஒன் அரசியல் டாக் ஷோ போன்றவற்றுக்காக கேரளாவில் மிகப் பிரபலமாக இயங்கி வந்தது. மாத்யமம் பிராட்காஸ்டிங் (Madhyamam Broadcasting) என்ற நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சேனலில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் கேரளப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிலையில் இன்று, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து மீடியாஒன் டிவியின் பெயர் நீக்கப்பட்டிருப்பதால் அதன் ஒளிபரப்பு சேவை தடைபட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சேனலுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கவில்லை என்பதால் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சேனலின் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு தெரிவித்துள்ளது என்று ஊடக தகவல்கள் சொல்கின்றன. எனினும், சட்டபூர்வ நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும், தற்போது ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீடியாஒன் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீடியாஒன் தொலைக்காட்சி செப்டம்பர் 30, 2021 முதல் செப்டம்பர் 29, 2031 வரை உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தது என்றும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த சேனலின் ஆசிரியர் பிரமோத் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், இன்னும் எங்களுக்கு முறையான விவரங்கள் கிடைக்கவில்லை. மத்திய அரசு முறையான விவரங்களை எங்களுக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மை. தடைக்கு எதிராக நாங்கள் சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்வோம். அந்த செயல்முறைகள் முடிந்தபின்பு சேனலின் ஒளிபரப்பு சேவை தொடங்கும். எப்போதும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையில் சேனலின் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் நிகழ்ந்த வன்முறையைப் பற்றிய செய்திகளை மத்திய அரசின் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிகளை மீறியதாக மீடியாஒன் தொலைக்காட்சி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே குற்றச்சாட்டுக்காக 2020-ம் ஆண்டு மார்ச்சில் மீடியாஒன் மற்றும் ஏசியாநெட் நியூஸ் செய்தி சேனல்கள் மத்திய அரசால் 48 மணிநேரம் தடை செய்யப்பட்டன. தற்போது மொத்த உரிமத்தையும் மத்திய அரசு தடை செய்துள்ளது.

கேரள அரசியல் தலைவர்கள், இந்த தடைக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ, முனீர் தனது ட்விட்டர் பதிவில், "மீடியா ஒன் உரிமத்தை ரத்து செய்யும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் முடிவு தன்னிச்சையானது மற்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கைகளை விமர்சனக் குரல்களை ஒடுக்குவது போல் உள்ளது. எனவே, தடையை விரைவில் நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். கேரள நெட்டிசன்கள் இந்த தடைக்கு எதிராக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருவது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x