Published : 31 Jan 2022 04:02 PM
Last Updated : 31 Jan 2022 04:02 PM

மணிப்பூர் தேர்தல்: வந்தவர்களுக்கு சீட்; உள்ளவர்களுக்கு இல்லை! - பற்றி எரியும் பாஜக அலுவலகங்கள்

இம்பால்: மணிப்பூர் சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 27, மார்ச் 3 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆயத்தமாக வேண்டிய வேளையில், அங்கு நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அலுவலகம் பற்றி எரிகிறது. உட்கட்சி நிலவரம், டெல்லி மேலிடம் வரை எட்டியுள்ளது. அதேபோல் காங்கிரஸுக்கு எதிராகவும் கட்சியினரே போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்.

மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இந்த 60 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை ஒரே மூச்சாக நேற்று அறிவித்தது பாஜக. அதற்கு சற்றுமுன்னதாக முதல்வர் என்.பைரன் சிங், கட்சியில் சீட் கேட்டுவந்த பாஜக முக்கியப் புள்ளிகளான எஸ்.எஸ்.ஓலிஸ் மற்றும் அவரது மருமகன் ஆர்.கே.வுடன் கடைசி சுற்று பேச்சுவார்த்தையை முடித்திருந்தார்.அதன்பின்னர்தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அங்குதான் சிக்கல் ஆரம்பித்தது.

கட்சியின் முதல்வர் வேட்பாளர் ஹெய்யாங் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என அறிவித்ததோடு, சிட்டிங் எம்எல்ஏக்களான வாங்கே தொகுதியின் ஒய்.எராபாத் சிங், மொய்ராங் தொகுதியின் பி.சரத்சந்திரா மற்றும் காக்சிங் தொகுதியின் எம்.ராமேஷ்வர் சிங் ஆகியோருக்கு சீட் வழங்க மறுத்தது.

ஆனால், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒக்ராம் இபோபியின் உறவினரும் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து அண்மையில் பாஜகவில் இணைந்தவருமான ஒக்ராம் ஹென்ரி சிங்குக்கு சீட் கொடுத்தது.

அதேபோல் மொய்ராங் தொகுதியையும் காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்த எம்.பிருதிவிராஜுக்கும், காக்சிங் தொகுதியை காங்கிரஸிலிருந்து வந்த ஒய்.சூர்சந்திராவுக்கும் பாஜக ஒதுக்கியது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாகல்பந்தில் உள்ள பாஜக மண்டல அலுவலகத்தை சூறையாடினர். அதேபோல் இன்னும் சிலர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியைக்கூட துறந்துவிட்டு எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக மற்ற கட்சிகளில் சேர்ந்தனர். பாஜக அதிருப்தியாளர்கள் மணிப்பூரின் என்பிபி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளில் இணைந்தனர்.

காங்கிரஸ் கூடாரத்திலும் குழப்பத்திற்கு பஞ்சமில்லை: பாஜகவில்தான் இப்படி என்றால், மணிப்பூர் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மோதலுக்குக் குறைவில்லை. சீட் மறுக்கப்பட்டதால் மணிப்பூர் பிரதேச காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் விஜாமணி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் கொடி, பதாகைகளை எரித்து ஆதரவாளர்களுடன் ரகளையில் ஈடுபட்டார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களில் 28 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த முறை இடதுசாரிகளுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிக்கு காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அதனால் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டு இடதுசாரிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில்தான் கட்சிக்குள் எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

தனித்துப் போட்டியிடும் என்பிபி: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து களம் கண்ட என்பிபி கட்சி இந்த முறை தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு இப்போது 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் 20 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x