Published : 31 Jan 2022 07:46 AM
Last Updated : 31 Jan 2022 07:46 AM
புதுடெல்லி: நாட்டின் மூத்த ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் (87). பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய எழுத்தாளரான இவர் பல்வேறு நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்தியாவின் ஆங்கில, குழந்தைகளுக்கான எழுத்தாளர்களில் முன்னோடியாக கருதப்படுகிறார்.
ரஸ்கின் பாண்டின் தந்தை ஆப்ரே அலெக்சாண்டர் பாண்டே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விமானப் படையில் பணியாற்றினார். கடந்த 1934-ம் ஆண்டு மே 19-ம் தேதி உத்தராகாண்டின் முசோரியில் பிறந்த ரஸ்கின், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். பிறந்த மண்ணை தாய் மண்ணாகக் கருதிய அவர், நாட்டைவிட்டு வெளியேறவில்லை.
தற்போது வரை திருமணம் செய்யாமல் இலக்கியத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ரஸ்கின் பாண்ட், உத்தராகண்டின் முசோரி அருகே லேண்டரில் வசிக்கிறார். நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, "எ லிட்டில் புக் ஆப் இந்தியா" என்ற நூலை அவர் எழுதியுள்ளார். பள்ளிப் பருவம் முதல் தற்போதைய வாழ்க்கை வரை தனது வாழ்வின் முக்கிய தருணங்களை மலரும் நினைவுகளாக இந்த நூலில் அவர் பதிவு செய்துள்ளார்.
இந்த நூலில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து, "முந்தைய பிரதமர்களைவிட பிரதமர் மோடி வித்தியாசமானவர். பல்வேறு வகைகளில் மக்களின் லட்சிய கனவுகளோடு இணைத்து தன்னை அடையாளப்படுத்தினார்.
ஜனநாயக நாட்டின் அரசியலில் ஏற்றம், இறக்கம் என்பது இயல்பானது. நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் என மிகச்சிறந்த பிரதமர்களை நாம் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் இப்போது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி நடத்துகிறார். எளிமையான பின்னணியில் இருந்து அவர் வந்திருந்தாலும் அரசியல் சாணக்கியம், புத்தி கூர்மை, ஆத்ம பலத்தால் மிக உயர்ந்த இடத்தை அவர் எட்டிப் பிடித்துள்ளார். இதன் காரணமாகவே இரு தேர்தல்களில் அவர் வெற்றிவாகை சூடினார்" என்று விவரித்துள்ளார்.
இந்த சில வரிகளுக்காக எழுத்தாளர் ரஸ்கினை, மோடியின் எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். அவரை சங்கி என்றும் பாஜக ஆதரவாளர் என்றும் வசைபாடி வருகின்றனர்.
இந்த எதிர்மறை விமர்சனத்தை எழுத்தாளர்களும் நடுநிலையாளர்களும் வன்மையாகக் கண்டித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, "ஆங்கிலேய பெற்றோருக்கு பிறந்திருந்தாலும் ரஸ்கின் பாண்ட்நம்மைவிட மிகச் சிறந்த இந்திய குடிமகன். தனது நூலில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து சில வரிகள் மட்டும் அவர் எழுதியுள்ளார். நாட்டின் அனைத்து பிரதமர்களையும் பாராட்டியுள்ள ரஸ்கின், பிரதமர் மோடியையும் பாராட்டியுள்ளார். இது ஒரு குற்றமா? லிபரல்ஸ் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பது நியாயமா" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சர்வதேச அரங்கில் ரஸ்கின் பாண்ட் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டில் அவருக்கு பத்ம விருதும் கடந்த 2014-ம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டன.
இந்திய கலையுலகின் பொக்கிஷமாக போற்றப்படும் ரஸ்கினுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன. ஆனால், ட்விட்டர்,பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் இல்லாத ரஸ்கின் நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் புதிய புத்தகம் எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT