Published : 28 Jan 2022 06:16 AM
Last Updated : 28 Jan 2022 06:16 AM
மும்பை: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்.10 முதல் 25-ம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற உள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டுகளான நீச்சல், வில்வித்தை, தடகளம், பூப்பந்து, குதிரையேற்றம், வாள்வீச்சு, கால்பந்து, ஹாக்கி, ஜூடோ, கபடி உள்ளிட்ட 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஈ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரேக்டான்சிங்கிற்கு இந்த ஆண்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதால் இவை பதக்க விளையாட்டுகளாக அறிமுகமாகிறது. மேலும், பார்வையாளர்களின் உற்சாகத்தை உயர்த்தும் வகையில் 11 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தெற்காசிய மண்டலத்தில் இந்தியா உறுப்பினராக உள்ளது. மேலும் ஆசிய விளையாட்டுகளின் அனைத்து பதிப்புகளிலும் போட்டியிட்ட 7 நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா உள்ளது. ஒவ்வொரு ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியா குறைந்தபட்சம் ஒருதங்கப் பதக்கத்தையாவது வென்றுள்ளது. 1990-ம் ஆண்டு போட்டியை தவிர, பதக்கப் பட்டியலில் முதல் 10 நாடுகளுக்குள் எப்போதும்இடம் பிடித்துள்ளது. இதுவரை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 139 தங்கம், 178 வெள்ளி மற்றும் 299 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓசியானியா நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் வாய்ப்பு முதன்முறையாக கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட ஓசியானியா விளையாட்டு வீரர்கள், டிரையத்லான், தடகளம், வுஷூ, ரோலர்ஸ்கேட்டிங், பளு தூக்குதல் ஆகிய5 விளையாட்டுகளில் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள். ஆசிய விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் சோனி தொலைக்காட்சி நேரலை செய்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT