Last Updated : 08 Jan, 2022 07:22 PM

 

Published : 08 Jan 2022 07:22 PM
Last Updated : 08 Jan 2022 07:22 PM

தொடங்கியது 5 மாநில தேர்தல் திருவிழா: பாஜகவுக்கு மட்டுமல்ல காங்கிரஸுக்கும் இந்த தேர்தல் முக்கியம் ஏன்?

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி: பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. உ.பி.யில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் 7 கட்டங்களாக நடத்தப்படும். உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும். பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது.

உத்தரகாண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் பிப்ரவரி 14-ம் தேதியும், மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ம் தேதியும் நடக்கும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடக்கவுள்ளது.

5 மாநிலங்களுக்கு நடக்கும் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியும், பஞ்சாபில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியும் நடக்கிறது.

இரு கட்சிகளுக்கும் முக்கியம்

5 மாநிலத் தேர்தலில் பஞ்சாப், உ.பி. தேர்தலைத்தான் அரசியல் பார்வையாளர்கள் பலரும் உற்றுநோக்கி வருகின்றனர். ஏனெனில் உ.பி.யில் பாஜகவும், பஞ்சாபில் காங்கிரஸும் மீண்டும் ஆட்சியை கைபற்றுவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். காங்கிரஸிடம் தற்போதுள்ள 52 மக்களவைத் தொகுதிகளில் பதினொன்று - 20% - பஞ்சாபில் இருந்து கிடைக்கிறது. பாஜகவின் வசம் உள்ள 301 மக்களவைத் தொகுதிகளில் 62 அதாவது 20% உத்தரப் பிரதேசத்தில் உள்ளது.

இதனால் இரண்டு தேசியக் கட்சிகளும் இந்த தேர்தலை தங்களின் முக்கிய செயல்திட்டமாக கருதுகின்றன. உத்தரப் பிரதேசத்தில் பாஜகவும், பஞ்சாபில் காங்கிரஸும் முறையே தங்கள் வலிமையை நிருபித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இதனைத் தவிர ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மாநிலங்களில் பாஜகவும் காங்கிரஸும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. ஆனால் இந்த இரு மாநிலங்களிலும் இவ்விரு கட்சிகளுக்கு மாநில கட்சிகள் தான் முக்கிய எதிரியாக உள்ளன.

உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு சமாஜ்வாடி கட்சி முக்கிய கட்சியாக உள்ளது. பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி முக்கிய போட்டியாளராக விளங்குகிறது.

பஞ்சாபில் பாஜக முக்கிய கட்சியாக இல்லை. அதுபோலவே உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் முக்கியப் போட்டியாளராக இல்லை. இது இந்த தேசியக் கட்சிகள் எதிர்கொள்ளும் ஒரு அடிப்படைப் பிரச்சினை.

சீக்கியர், கிறிஸ்தவர்களை கவரும் பாஜக

பாஜகவுக்கு மத சிறுபான்மையினர் வாக்குகள் சிக்கலாக உள்ளது. பஞ்சாபில் சீக்கியர்களை ஈர்க்கும் அதன் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. மூன்று விவசாய சட்டங்கள் குறித்த பிரச்சினையில் பெரும்பாலும் விவசாய சமூகமான சீக்கியர்களுடன் கட்சிக்கு மோதல் ஏற்பட்டது. மறுபுறம் காங்கிரஸ் மத சிறுபான்மையினரால் இயல்பாகவே நம்பப்படும் கட்சியாகக் கருதப்படுகிறது. தற்போது சிறுபான்மையினரின் கணிசமான மக்கள்தொகையைக் கொண்ட பகுதிகளில் வலிமையாக உள்ளது. ஆனால் இது பஞ்சாபில் மட்டுமே. உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை ஈர்ப்பதில் சமாஜ்வாதி கட்சி முன்னணி வகிக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனிதத் தலங்களுக்குச் செல்வதை எளிதாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் பஞ்சாபில் சீக்கியர்களை பாஜக கவர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி போப்பாண்டவரைச் சந்தித்தபோது மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட கோவாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களிடம் நட்பைக் காட்ட பாஜக விரும்புகிறது.

மோடியின் அரசியல் வாரிசு யோகி?

உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால், மோடியின் வருங்கால அரசியல் வாரிசாக பாஜகவில் யோகி ஆதித்யநாத் உருவெடுப்பார் என்ற பார்வையும் பெரும்பாலான பார்வையாளர்களால் முன் வைக்கப்படுகிறது. சமீபத்திய மாதங்களில் அவரது பிரச்சாரம், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தை சுற்றி வரும் துணிச்சலான இந்துத் தலைவராக அவர் மீது கவனம் குவிக்கப்படுகிறது. பாஜகவின் மற்ற முதல்வர்களைப் போலல்லாமல், ஆதித்யநாத் ஏற்கெனவே பிரதமர் மோடியின் நிழலாக பார்க்கப்படுகிறார்.

பிரியங்காவின் அரசியல் எதிர்காலம்

காங்கிரஸில், பிரியங்கா காந்தி வத்ரா அதன் உத்தரபிரதேச வியூகத்தை வகுக்கும் பொறுப்பில் உள்ளார். மேலும் அவரே பஞ்சாபில் காங்கிரஸ் மாநில தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை தேர்வு செய்தார். கட்சியின் செயல்திறன் அவரது தலைமைத்துவ திறன்களை இந்த தேர்தல் பிரதிபலிக்கும் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இதன் மூலம் கட்சியில் அவரது பங்கு மேலும் வலிமையாகும்.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி குறிப்பிட்ட சாதியினரால் வழிநடத்தப்படுவதால் அதன் சிக்கலை அந்த கட்சி சந்திக்கிறது. பஞ்சாபில் உள்ள சிரோமணி அகாலி தளம் மத சிறுபான்மையினரான சீக்கியர்களை மையப்படுத்தியே நடக்கிறது. இந்தியாவில் பிராந்திய அரசியல் அமைப்புகளின் தனித்துவம் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அவர்களின் பாரம்பரிய அணிதிரட்டல் உத்திகள் இப்போது பலவீனமாக உள்ளன. மேலும் அவர்களின் ஊழல் நிறைந்த வாரிசு அரசியல் வாக்காளர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.

தடம் மாறும் தலித் வாக்குகள்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்த தலித் அரசியல் இப்போது மாறி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் பலமுறை ஆட்சியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சி, இறுதிக்கட்ட சரிவைச் சந்தித்து வருகிறது. பஞ்சாபிலும் அது ஒரு வலுவான கட்சியாக இருந்தது. ஆனாலும் அது ஒருபோதும் அதிகாரத்தை வென்றதில்லை.

ஆனால் உத்தரபிரதேசத்தில் பிஎஸ்பி இழக்கும் தலித் வாக்காளர்களிடம் பாஜக குறிப்பிடத்தக்க அளவில் ஊடுருவியுள்ளது. பஞ்சாபில், கடந்த காலங்களில் தலித்துகள் காங்கிரஸுக்கு பெருமளவில் வாக்களித்துள்ளனர், மேலும் தலித் இனத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தலித் அரசியல் இங்கிருந்து எப்படிப் பரிணமிக்கப் போகிறது என்பதற்கான சில அறிகுறிகளைக் கொடுக்கும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தலித்துகள் மத்தியில் தங்கள் தளத்தை விரிவுபடுத்த முயற்சி செய்கின்றன.

பாஜகவுக்கு மாற்றாக உருவடுக்குமா மாநில கட்சிகள்?

பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸ் அல்லாத கட்சியை சேர்ந்த இரண்டு முதல்வர்கள் தற்போது குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு வெளியே தங்கள் கட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் உள்ளனர்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. இருவரும் 2024க்கு முன்னதாக பிரதமர்மோடிக்கு முதன்மையான சவாலாக இருக்க விரும்புகிறார்கள்.

கேஜ்ரிவாலின் கவனம் பஞ்சாப். அங்கு அவரது கட்சி 2017 இல் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. மம்தா பானர்ஜி கோவாவில் கவனம் செலுத்துகிறார். ஆம் ஆத்மி கட்சி கோவா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசத்திலும் உள்ளது. மணிப்பூரிலும் கால் பதிக்க திரிணமூல் முயலுகிறது.

இந்த இரு தலைவர்களின் தேசிய விருப்பங்கள் இரண்டு வெவ்வேறு மாதிரிகள் மற்றும் இரண்டு வெவ்வேறு கணக்கீடுகளின் அடிப்படையிலானவை. இம்முறை அவர்களின் செயல்பாடு 2024க்கு முந்தைய தேசிய அரசியலின் போக்கை முடிவு செய்யக்கூடும். எனவே இந்த 5 மாநில தேர்தல் என்பது இந்த போக்கில் முக்கியத்துவம் பெறும். எது எப்படியாகினும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பது உறுதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x