Published : 28 Dec 2021 02:07 PM
Last Updated : 28 Dec 2021 02:07 PM

டெல்லி மருத்துவர்கள் போராட்டம்: இதுவரை நடந்தது என்ன?- முக்கிய அம்சங்கள்

நீட் கவுன்சிலிங் நடத்தக் கோரி டெல்லியில் மருத்துவர்கள் இன்று போராட்டம் நடத்திய காட்சி | படம்: ஏஎன்ஐ.

புதுடெல்லி: நீட் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு விரைந்து கவுன்சிலிங்கை நடத்த வலியுறுத்தி டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

மருத்துவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டித்து, நாளை காவல்துறையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு 2020-ம் ஆண்டு நடக்க இருந்த நிலையில், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள் வந்த நிலையில் இன்னும் கவுன்சிலிங் நடத்தப்படாமல், இடங்கள் ஒதுக்கப்படாமல் இருக்கிறது. இதை உடனடியாக நடத்தக் கோரி டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் ஒமைக்ரான், கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது மருத்துவ சேவையைக் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக லேடி ஹர்டிங்கே மருத்துவக் கல்லூரி, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை, டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, பாபா சாஹிப் அம்பேத்கர் மருத்துவமனை, கோவிந்த் வல்லவ் பந்த் மருத்துவமனையில் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கவுன்சிலிங்கை உடனடியாக நடத்தக் கோரி மவுலானா ஆசாத் கல்லூரியிலிருந்து உச்ச நீதிமன்றத்தை நோக்கி மருத்துவர்கள் நேற்று ஊர்வலம் சென்றனர். அப்போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீஸாரின் வாகனங்கள் தாக்கப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. போலீஸார் 7 பேர் காயமடைந்தனர்.

அதேபோல மருத்துவர்கள் தரப்பிலும் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் 12 மருத்துவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பணியில் இருக்கும் அதிகாரியைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட 12 மருத்துவர்களையும் விடுவிக்கக் கோரி நேற்று இரவு கொட்டும் பனியில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இன்றும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாததால், மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது.

மருத்துவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு அனைத்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டித்து, நாளை காவல்துறையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

ரெசிடென்ட் மருத்துவர்கள் ஏற்கெனவே கடந்த நவம்பர் 27, இம்மாதம் 8-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுடன் நடத்திய பேச்சில் கோரிக்கைகள் விரைவில் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்ததால், போராட்டம் விலக்கப்பட்டது.

அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராகப் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால்தான் நீட் கவுன்சிலிங் தாமதமாகி வருகிறது. ஆனால், கவுன்சிலிங்கை உடனடியாக நடத்தக் கோரி மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x