Last Updated : 27 Dec, 2021 09:13 AM

 

Published : 27 Dec 2021 09:13 AM
Last Updated : 27 Dec 2021 09:13 AM

குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி சிறந்த எதிர்ப்பாற்றலை வழங்குகிறது: தேசிய தடுப்பூசி திட்ட தொழில்நுட்பக் குழுத் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தகவல்

புதுடெல்லி: குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி சிறந்த எதிர்ப்பாற்றலை வழங்குகிறது என தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்பக் குழுத் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 15 முதல் 18 வயதுவரை உள்ள பிரிவினருக்கு 2022, ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவி்த்தார். முன்களப்பணியாளர்கள், 60வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமரின் முடிவு குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேகப் பேட்டியளித்துள்ள தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்பக் குழுத் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா கூறியதாவது:

12 முதல் 18 வயதிலான குழந்தைகள் குறிப்பாக 15 முதல் 18 வயது கொண்ட குழந்தைகள் வயது வந்தோரைப் போலவே உள்ளனர். உள்நாட்டில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்த 18 வயதுக்கும் கீழ் உள்ளோரின் பெரும்பாலோனார் 15 வயது முதல் 18 வயது உள்ளவர்களே. ஆகையால் அரசு இந்த முடிவை பதின்ம வயது கொண்டோரை பாதுகாக்கவே எடுத்துள்ளது.

பதின்ம வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதால் இன்னும் இரு நன்மைகளும் இருக்கின்றன. இந்த வயதில் உள்ளவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்களுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். அதேபோல் இவர்களுக்குத் தொற்றும் ஏற்படும் போது இவர்களால் வீட்டில் உள்ள முதியோர், இணை நோய் கொண்டோருக்கும் தொற்று ஏற்படும். ஒமைக்ரான் பரவும் சூழலில் 15 முதல் 18 வயது கொண்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதால் நன்மைகளே அதிகம்.

இவ்வாறு மருத்துவர் அரோரா கூறினார்.

மருத்துவர் என்.கே.அரோரா

கோவாக்சின் தடுப்பாற்றல் சிறப்பு: 15 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையரகம் அனுமதியளித்துள்ளது. இது குறித்து மருத்துவர் அரோரா, "கோவாக்சின் தடுப்பூசியில் கிளினிக்கள் பரிசோதனை முடிவுகள் அனைத்துமே அவை குழந்தைகளில் சிறப்பான கோவிட் 19 தடுப்பாற்றல் தருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு இன்னும் அதிகமாக தடுப்பாற்றல் தருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது. தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளான வலி, கைகளில் வீக்கம் ஆகியன கூட பெரியவர்களை ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கிறது. ஒமைக்ரானால் ஏற்படும் பாதிப்பு டெல்டாவை ஒப்பிடும்போது குறைவாகவே இருந்தாலும் கூட, பள்ளிகள் திறந்துவிட்ட நிலையில் நிறைய பெற்றோர் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். ஆகையால் இந்த தடுப்பூசித் திட்டம் பெற்றோருக்கு நம்பிக்கை தரும். இந்தத் தடுப்பூசித் திட்டம் நாட்டின் பதின்ம வயது குழந்தைகளுக்கான புத்தாண்டு பரிசு" என்றார்.

இம்யூனோஜெனிசிட்டி ஆய்வு: பெரியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் போது தடுப்பூசி எதிர்பாற்றல், அதாவது efficacy (எஃபிக்கஸி) குறித்து ஆய்வு செய்யப்படும். ஆனால் குழந்தைகளுக்கு immunogenicity (இம்யூனோஜெனிசிட்டி) குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இம்யூனோஜெனிசிட்டி என்றால் தடுப்பூசியால் ஒரு குழந்தையின் உடலில் எந்த அளவுக்கு ஆன்ட்டிபாடி உருவாகிறது என்பது குறித்த அளவீடு. குழந்தைகள், பெரியவர்களை ஒப்பிடும் போது அதிக அளவில் ஆன்ட்டிபாடிக்களைப் பெறுகின்றன. குழந்தைகளுக்கும் 4 வார இடைவெளியில் தடுப்பூசியை செலுத்தலாம்.

குழந்தைகளுக்கு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியும்,பூஸ்டர் டோஸ் போடுவோருக்கு அவர்கள் ஏற்கெனவே செலுத்திக் கொண்ட தடுப்பூசியே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x