Published : 17 Dec 2021 03:05 AM
Last Updated : 17 Dec 2021 03:05 AM

இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்: விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

ஆனந்த் (குஜராத்): இயற்கை விவசாயத்துக்கு மாற இதுதான் சரியான தருணம் என இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் இயற்கை வேளாண்மை குறித்த 3 நாள் தேசிய கருத்தரங்கு 14-ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று இம்மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நாட்டின் பசுமைப் புரட்சியில் ரசாயனம் மற்றும் உரங்கள் முக்கிய பங்கு வகித்தது உண்மைதான். ஆனால் இந்த முறையில்விளைவிக்கப்படும் விளைபொருட்களை உட்கொள்ளும் மனிதர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இப்போது மாற்று வழிகளுக்கு மாற வேண்டியது அவசியமாகிறது. வேளாண்மை தொடர்பான பிரச்சினைகள் மேலும் பெரிதாவதற்கு முன்பாக சில முக்கியநடவடிக்கைகளை மேற்கொள்ள இதுதான் சரியான தருணம். குறிப்பாக இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டிய தருணம் வந்துவிட்டது. நோய் வந்த பிறகு குணப்படுத்துவதற்கு பதில் வருமுன் காப்பதே சிறந்தது.

இயற்கை விவசாயத்தால் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள 80 சதவீத சிறு விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதன்மூலம் ரசாயன உரங்களுக்கு செலவிடும் தொகையை மிச்சப்படுத்தலாம்.

இயற்கை விவசாயத்தில் பசுக்கள் முக்கிய பங்கு வகிக்கும். பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீரை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு பதிலாக பயன்படுத்தலாம். இயற்கை வேளாண்மையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டியது அவசியம். இந்தப் புரட்சிக்கு விவசாயிகளும் மாநில அரசுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வேளாண்மையின் அடிப்படையை நாம் மீண்டும் தெரிந்துகொண்டு, அதை புதிய தொழில்நுட்பத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும். வேளாண் தொழில்நுட்பத்தில் உள்ள சில தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். பயிர்க் கழிவுகளை எரிக்கக்கூடாது. அவ்வாறு எரிப்பதால் மண்ணின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இயற்கை விளைபொருளுக்கு சான்று

இம்மாநாட்டில் நேரில் பங்கேற்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

இந்தியாவில் இயற்கை வேளாண் முறையில் பயிரிடப்படும் பொருட்களைக் கண்டறிய ஆய்வகத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம் மூலம் ஆர்கானிக் தயாரிப்புகளுக்கு சான்று அளிக்கப்படும். இவ்வித சான்று பெற்ற வேளாண் பொருட்களுக்கு விவசாயிகள் கூடுதல் விலையைப் பெற முடியும். இதன் மூலம் மேலும் பல விவசாயிகள் இயற்கை வேளாண் முறைக்குத் திரும்ப ஊக்குவிப்பதாக அமையும்.

2019-ம் ஆண்டிலிருந்தே பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சாகுபடியில் இயற்கை முறையைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகிறார். மாட்டு சாணம் மூலமான இயற்கை உரங்கள் மண் வளத்தைப் பெருக்க உதவும். இதன்மூலம் விவசாயிகளுக்கு கூடுதல்வருமானம் கிடைக்கும் என்பதை வலியுறுத்தினார். நமது இப்போதைய தேவையும் ரசாயன கலப்பு இல்லாத இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள்தான். அதைதான் விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x