Published : 10 Dec 2021 09:57 AM
Last Updated : 10 Dec 2021 09:57 AM

என் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானே விசாரித்திருக்க கூடாது; 45 ஆண்டுகால வழக்கறிஞர் பணி வீணாகிவிட்டது: முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் | கோப்புப்படம்

புதுடெல்லி


நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது அதன் செயல்பாட்டுக்கு அச்சுறுத்துல்விடுக்கும் வகையில்தான் என் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக பார்க்கிறேன் என்று முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், அயோத்தி வழக்கில் தீர்ப்பு, சபரிமலை தீர்ப்பு மறுஆய்வுமனு, ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு, ரஃபேல் வழக்கு உள்ளிட்டவற்றில் தீர்ப்பு வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றபின் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக கோகய் உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் ஒருவர் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். இந்த வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

இந்த விசாரணைக் குழுவில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் இடம் பெற்று குற்றச்சாட்டை விசாரிக்க தனியாக குழு அமைத்தார். அந்த குழுவில் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் இடம் பெற்றிருந்தார். விசாரணையின் முடிவில் ரஞ்சன் கோகய் மீது எந்தக் குற்றமும் இல்லை என விசாரணைக் குழு தீர்ப்பளித்தது.

இந்த சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரஞ்சன் கோகய், தன்னுடைய “ நீதிபதிக்கான நீதி” என்ற தலைப்பில் சுயசரிதை நூல் எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீ்்்ட்டுநிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடந்தது. அதில் ரஞ்சன் கோகய் பேசியதாவது

கடந்த 2019-ம் ஆண்டு நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது என் மீது நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். அது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் நானும் இருந்தேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை அந்த வழக்கின் விசாரணையில் நான் இடம் பெற்றிருக்கக் கூடாது. நாம் எல்லோரும் தவறு செய்கிறோம். அந்த தவற்றை ஏற்றுக்கொள்வதில் எந்த பாதிப்பும் இல்லை.

எனக்கு எதிராக குற்றச்சாட்டை விசாரிக்கும் போது அந்த விசாரணைக் குழுவில் நானே இடம் பெற்றிருக்க கூடாது. என்னுடைய 45 ஆண்டுகால வழக்கறிஞர் வாழ்க்கையே அதன் மூலம் வீணாகிவிட்டதாக நான் நினைக்கிறேன். அந்த விசாரணைக் குழுவில் நான் இடம் பெற்றிருக்காமல் இருப்பதே சிறந்தது.

என் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அதை விசாரிக்க திடீரென சிறப்பு அமர்வு கூட்டப்பட்டது.அது முறையான விசாரணையில்லை. ஆனால் அந்த அமர்வில் நானும் இருந்தேன், அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் என்னால் கையெழுத்துப்போடவில்லை மறுத்துவிட்டேன்.

என்னைப் பொறுத்தவரை தலைமை நீதிபதியாக நான் இருந்தபோது, என் செயல்பாட்டுக்கு ஆபத்துக்கு விளைவிக்கவே என் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாகவே நினைக்கிறேன். விசாரணையின் முடிவில் யாருக்கும் பாதகமில்லாத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது”

இவ்வாறு ரஞ்சன் கோகய் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x