தலித் மீதான வன்கொடுமை: மத்திய சமூக நீதித்துறை அமைச்சரிடம் விசிக மனு

தலித் மீதான வன்கொடுமை: மத்திய சமூக நீதித்துறை அமைச்சரிடம் விசிக மனு
Updated on
2 min read

மத்திய சமூக நீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர்.வீரேந்தர் குமாருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் டி.ரவிகுமார் இன்று சந்தித்தனர்.

அப்போது, தலித் மீதான வன்கொடுமை, கல்வி உதவி மற்றும் அரசு பணி பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான ரவிக்குமார் சார்பில் தனித்தனியாக மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்தர் குமாரிடம் மனுக்கள் அளித்தனர்.

அக்கடிதத்தில் தலித் சமூகத்தினருக்கான மூன்று முக்கியமான கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தது. அவை பின்வருமாறு: வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி மாவட்ட மற்றும் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டங்களை பல மாநிலங்களில் முறையாக நடத்துவதில்லை.

இதுவும், நாடெங்கும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, அந்த கூட்டங்களை நடத்தும் படி மாநிலங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

பல்வேறு மாநிலங்களிலும் ஆணவக்கொலைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதையும் எடுத்துக் கூறினோம். போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் 2.5 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்களின் இட ஒதுக்கீட்டுக்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது. ஆனால், எஸ்சி, எஸ்டி மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு ரூ.2.5 லட்சம் என இருப்பது சரியல்ல.

இதனால் கடைநிலை ஊழியராக இருக்கும் ஒருவரது பிள்ளைகூட ஸ்காலர்ஷிப் பெற முடியாத நிலை உள்ளது. எனவே, ரூ.2.5 லட்சம் என்பதை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்காக நிரப்பப்படாமல் பின்னடைவு காலிப் பணியிடங்கள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தால் இந்த சமூகத்தினருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இவ்வாறு அக்கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘‘இந்து தமிழ் திசை’ இணையத்திடன் திமுக எம்.பி.யான ரவிக்குமார் கூறும்போது. ‘‘கொள்கை முடிவு சார்ந்த விஷயங்களில் தமது அமைச்சகம் மட்டுமே முடிவெடுக்க முடியாது எனவும், இது தொடர்பாக பிறரிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.’’ எனத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது விசிக தலைவர் திருமாவளவனிடம் மத்திய அமைச்சர் வீரேந்திர குமார், 2009 இல் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்தே அவரை தான் அறிவதாக நினைவு கூறி இருந்தார்.

நாடாளுமன்றத்தில் எந்தப் பிரச்சனையை எப்படி? பேச வேண்டும் என்பதை சரியாக அறிந்து அதற்குரிய அழுத்தத்தோடு அவர் பேசுவார் எனவும் விசிக தலைவர் திருமாவளவனை பெருமையோடு நினைவு கூர்ந்திருந்தார் அமைச்சர் வீரேந்திரகுமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in