Last Updated : 16 Dec, 2015 10:34 AM

 

Published : 16 Dec 2015 10:34 AM
Last Updated : 16 Dec 2015 10:34 AM

கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை செய்த விவகாரம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி - அருணாச்சல பிரதேச பிரச்சினையை எழுப்பியது காங்கிரஸ்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியது மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநில விவகாரம் ஆகியவை காரணமாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று காலை யில் கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் அருணாச்சல பிரதேச மாநில விவ காரத்தை எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, “அருணாச் சலப் பிரதேச மாநில அரசையோ, முதல்வரையே கலந்து ஆலோசிக் காமல் சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். நிகழ்ச்சி நிரலை ஆளுநரே முடிவு செய்துள்ளார்.

மேலும் சபாநாயகர் தலைமை ஏற்க மாட்டார் என்றும் அறிவித் துள்ளார். இது அவரது அதிகார வரம்பை மீறிய செயல். சர்வாதிகாரி போல அவர் செயல்படுகிறார். இது போன்ற ஜனநாயக விரோத செயல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்கூட நடந்தது இல்லை. இந்த செயலை எங்கள் கட்சி அனுமதிக்காது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “மாநில சட்டப்பேரவை தொடர்பான விவகாரத்தை இங்கு விவாதிக்க அனுமதிக்கக் கூடாது” என்றார்.

இதையடுத்து, அவை விதிகளின் படி ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க முடியாது என்று மாநிலங் களவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார். இதனால் அவையின் மையப் பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் அவை கூடியபோது, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அலுவலகத் தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பின.

திரிணமூல் காங்கிரஸ் உறுப் பினர் டெரிக் ஓ பிரயன் பேசும் போது, “டெல்லி முதல்வர் அலு வலகத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுவதைப்போன்ற உணர்வைத் தருகிறது” என்றார்.

இதையடுத்து அக்கட்சியின் மற்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கோஷம் எழுப்பினர். இடது சாரி உறுப்பினர்களும் தங்கள் இருக் கையிலிருந்து எழுந்து நின்றபடி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதற்கிடையே, காங்கிரஸ் உறுப் பினர்கள் மீண்டும் அருணாச்சல பிரதேச மாநில பிரச்சினையை எழுப்பி கோஷம் எழுப்பினர்.

கேஜ்ரிவால் அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசும்போது, “டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தவில்லை. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு அதிகாரி மீது பதிவான ஊழல் புகார் தொடர்பாகவே சோதனை நடத்தப்பட்டது” என்றார்.

அமைச்சரின் இந்த பதிலால் திருப்தி அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளி யில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில்…

பஞ்சாப் மாநிலத்தில் 2 தலித் இளைஞர்கள் வெட்டப்பட்ட விவ காரம் தொடர்பாக மக்களவையில் அமளி நிலவியது. நேற்று காலை யில் அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தப் பிரச் சினையை எழுப்பினர்.

காங்கிரஸ் உறுப்பினர் ஜோதி ராதித்ய சிந்தியா பேசும்போது, “சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள பஞ்சா பில், தலித்களுக்கு எதிரான செயல் தொடர்பாக 18 நிமிடங்களுக்கு ஒரு வழக்கு பதிவாகி வருகிறது. சரா சரியாக தினமும் ஒரு தலித் பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார். சமீபத்தில் 2 இளைர்கள் வெட்டப் பட்டுள்ளனர்” என்றார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பாஜக மற்றும் அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்கள் கருத்து களை எடுத்து வைத்தனர். இது தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து இதுபற்றி பேச மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அனுமதி மறுத்தார். இதையடுத்து, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x