Last Updated : 19 Dec, 2015 09:24 AM

 

Published : 19 Dec 2015 09:24 AM
Last Updated : 19 Dec 2015 09:24 AM

மத்திய அரசு உண்மையை மறைக்கிறது: கல்புர்கி உட்பட 3 பேரும் ஒரே ரக துப்பாக்கியால் கொலை - க‌ர்நாடக சிஐடி விசாரணையில் தகவல்

மூடநம்பிக்கைக்கு எதிராகவும் இந்துத்துவா கருத்துக்கு எதிராகவும் எழுதிய கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி (78) கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாடில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கிற்கும் மகாராஷ்டிராவில் இதே பாணியில் சுட்டுக் கொல்லப் பட்ட முற்போக்கு சிந்தனையாளர் கள் நரேந்திர தாபோல்கர் (69), கோவிந்த் பன்சாரே (81) கொலை வழக்குகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து கர்நாடக சிஐடி போலீஸார் மகாராஷ்டிராவுக்கு சென்று நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் தபோல்கர், பன்சாரே ஆகியோரை சுட்ட துப்பாக்கிகள் குறித்தும் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்கள் குறித்தும் வழங்கப்பட்ட தடயவியல் ஆய்வு முடிவுகளை சோதித்த‌னர். அப்போது கல்புர்கியை கொல்ல பயன்படுத்தப்பட்ட 7.65 எம்.எம். நாட்டு ரக துப்பாக்கியே தபோல்கர், பன்சாரே ஆகியோரை கொல்லவும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

மூவருக்கும் தனிப்பட்ட எதிரிகளோ, சொத்துக்காக ப‌ழி வாங்கும் வழியிலோ, சொந்த பிரச்சினைக்காக கொல்லும் நிலையிலோ யாரும் இல்லை. இருப்பினும் மூன்று வழக்கிலும் இதுவரை உறுதியாக எந்த குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை.

மூன்று பேரும் மூட நம்பிக்கைக்கு எதிராகவும் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராகவும் செயல்பட்டதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம். மூவரும் கொல்லப்பட்ட பாணி, சூழல், இருப்பிடம் ஆகியவற்றை பார்க்கும்போது ஒரே கும்பல் திட்டமிட்டு, மூவரையும் கொலை செய்திருக்ககூடும் என்ற உறுதியான சந்தேகமும் எழுகிறது.

கல்புர்கியின் கொலைக்கும் தபோல்கர், பன்சாரே கொலைக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. எனவே அந்த வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ விசாரணை அதிகாரிகளிடம் சில தகவல்களை கர்நாடக சிஐடி அதிகாரிகள் கேட்டனர். ஆனால் சிபிஐ தகவல்களை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டது. மூவர் கொலை தொடர்பான உண்மைகளை மத்திய அரசு மறைக்கிறது.

கல்புர்கி, தபோல்கர், பன்சாரே ஆகிய மூவரின் கொலைக்கும் நேரடி தொடர்பில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால் மூவரும் ஒரே ரக துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது முதல் பல ஒற்றுமைகள் உள்ளன. எனவே கர்நாடக சிஐடி அதிகாரிகளுக்கு சிபிஐ உரிய முறையில் ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் குற்றவாளிகளை பிடிக்க முடியும் என சிஐடி போலீஸ் இயக்குநர் கிஷோர் சந்திரா கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிபிஐ விசாரிக்க மறுப்பதேன்?

கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் கூறுகையில், '' கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களிலே கர்நாடக அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இதுவரை இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கவில்லை. கல்புர்கியை கொன்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x