Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

‘யாஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை: பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அழைத்துச் செல்ல அறிவுரை

‘யாஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய, மாநில உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது புயல்அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை குறித்த நேரத்துக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினார்.

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று புயலாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறும். 'யாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் வரும் 26-ம் தேதி மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா பகுதியை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

‘யாஸ்' புயலால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம், அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழை பெய்யும். ஒடிசா, மேற்குவங்கம், வங்கதேசம் பகுதியில் புயல் கரையைக் கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது

இந்த பின்னணியில், ‘யாஸ்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் உள்துறை, தொலைத்தொடர்பு, மீன் வளம், விமான போக்குவரத்து, மின்சாரம், துறைமுகம், புவி அறிவியல், ரயில்வே உட்பட 14 மத்திய துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: புயல் அபாயபகுதிகளில் வசிக்கும் மக்களைகுறித்த நேரத்துக்குள் பாதுகாப்பானஇடங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும். குறிப்பாக கடலோரம்வசிக்கும் மக்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.

மின் விநியோகம், தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் விரைந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா மருத்துவமனைகள், கரோனா தடுப்பூசிமையங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்.

புயலின்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து உள்ளூர் மொழிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகங்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும். தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, கடற்படை ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.

மே.வங்கத்தில் கட்டுப்பாட்டு அறை

புயல் கரையைக் கடக்கும் ஒடிசா, மேற்குவங்கத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 46 குழுக்கள் முகாமிட்டுள்ளன. நேற்று மேலும் 13 குழுக்கள் விமானம் மூலம் இரு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டன.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறும்போது, "புயல் தொடர்பாக கொல்கத்தாவில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைதொடங்கப்பட்டுள்ளது. கடலோர, நதிக்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குஅழைத்துச் செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

3,500 நிவாரண மையங்கள்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கூறும்போது, "கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி புயல் நிவாரணப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்போது யாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு விடக்கூடாது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். ஒடிசா அரசின் சிறப்புநிவாரண அதிகாரி பிரதீப் கூறும்போது, "புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒடிசா முன்னோடி மாநிலம் ஆகும். தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பலாசூர், கேந்திரபரா உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒடிசாவில் சுமார்12-க்கும் மேற்பட்ட ரயில்களை வடக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x