Last Updated : 06 Dec, 2015 12:55 PM

 

Published : 06 Dec 2015 12:55 PM
Last Updated : 06 Dec 2015 12:55 PM

வெளிமாநில நிவாரணப் பொருட்களுக்கு போக்குவரத்து வசதி கோரப்படுமா?

வெளிமாநில நிவாரணப் பொருட்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு போக்குவரத்து வசதி கோருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, துணி, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அனுப்ப நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முன்வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் வாழும் தமிழர்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்துக்காக நிவாரணப் பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் அவற்றை நேரடியாக அனுப்பினால் அப்பொருட்களின் மதிப்பை விட கூடுதல் செலவாக வாய்ப்புகள் அதிகம். எனவே இதற்காக ரயில், விமானம் மற்றும் பேருந்துகள் ஏற்பாடு செய்வது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாநிலமான தமிழகம், மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் கூறும்போது, “இதுபோன்ற காலங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்ப தனியாக ரயில் விடவும் அல்லது கூடுதலான பார்சல் பெட்டிகளை இணைக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் இதற்காக தமிழக அரசின் கோரிக்கையின் பேரிலேயே ரயில்வே துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும். இதுபோல் விமானங்களில் நிவாரணப் பொருட்களை அனுப்ப விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட வேண்டும்.

தமிழகத்தை சுனாமி தாக்கியபோது, வட இந்தியாவில் பல்வேறு அமைப்பினர் சேகரித்த பொருட்களை அந்தந்த மாநில அரசுகளே இலவசமாக அனுப்பின. இந்தப் பணியை தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் செய்யலாம். நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்த மீட்புப் படையினர் மூலமாகவே நிவாரணப் பொருட்கள் அங்கு சென்றன. இது தொடர்பாக இப்படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது” என்றனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் விசாரித்த போது, “நிவாரணப் பொருட்கள் அனுப்புவது குறித்த கோரிக்கை தமிழகத்திடம் இருந்து இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. அப்படி கிடைக்கும் பட்சத்தில் அதற்கான உத்தரவிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x