Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM

கரோனா அறிகுறிகளுடன் இறந்த தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற மகன்: ஆம்புலன்ஸில் ஏற்றாததால் பரிதாபம்

ஆந்திர மாநிலத்தில் கரோனா அறிகுறிகளுடன் இறந்த பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால், மகனும், மருமகனும் 20 கி.மீ. தூரம் வரை சடலத்தை பைக்கில் கொண்டு சென்றனர்.

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மந்தன மண்டலம், கிலாயி கிராமத்தை சேர்ந்த பழங்குடியினப் பெண் செஞ்சுலா (60). இவர் கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல், இருமல் என கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டார். இவரை, இவரது மகனும், மருமகனும் பலசா பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கரோனா அறிகுறிகள் உள்ளதால், ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி, மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதற்கான ரிப்போர்ட் வரவில்லை. அதற்குள் அங்கு காத்திருந்த செஞ்சுலா மரணமடைந்தார். ஆனால், இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் அல்லது வாகன வசதி அளிக்க எவரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் வேறு வழியின்றி, மகன் பைக்கை ஓட்ட, அவரது தாயின் உடலை நடுவில் வைத்து, மருமகன் பின்னால் அமர்ந்து சடலத்தை பிடித்தபடியே சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள சொந்த கிராமத்தை அடைந்தனர்.

இதனிடையே வழியில் இவர்களை நிறுத்தி விசாரித்த போலீஸாரும் மாற்று ஏற்பாடுசெய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x