Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

லடாக்கில் எல்லையில் ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ வைரல்

லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து சில முக்கியப் பகுதிகளை கைப்பற்ற முயற்சித்தனர். இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பதற்றம் உருவானது. இதனிடையே, அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, லடாக் விவகாரம் தொடர்பாக இரு நாடுகள் இடையே ராணுவ ரீதியிலும், ராஜாங்க ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, லடாக்கில் இருந்து சீன ராணுவம் அண்மையில் வெளியேறியது. இதன் மூலம், உலகிலேயே பலம் மிக்கதாக கருதப்படும் சீன ராணுவத்தின் அத்துமீறலையே முறியடித்த பெருமை இந்திய ராணுவத்துக்கு கிடைத்துள்ளது. லடாக்கில் நிலவும் கடுங்குளிரையும், உறை பனியையும் பொருட்படுத்தாமல் அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நமது எல்லையை தற்போது பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள சீதோஷ்ண நிலை, தங்கள் குடும்பத்தினரை பல மாதங்களாக பிரிந்திருக்கும் சோகம் என அத்தனையையும் மறந்து, லடாக்கில் இரண்டு ராணுவ வீரர்கள் உற்சாகமாக நடனமாடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்தார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x