Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

மம்தாவின் தோல்வி அச்சத்தைக் கொடுக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். திரிணமூல் காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தவரான சுவேந்து அதிகாரிக்கு, நந்திகிராம் தொகுதியில் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு உள்ளது. இதனால், இந்தத்தேர்தலானது மம்தாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் நாளை நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் நந்திகிராம் தொகுதியும் இடம்பெறுகிறது. இதனை முன்னிட்டு, அங்கு பாஜக சார்பில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:

திரிணமூல் ஆட்சியில் மேற்குவங்கமே சமூக விரோதி களின் கூடாரமாக மாறிவிட்டது. எங்குபார்த்தாலும் கொலை, கொள்ளை,பலாத்காரம் போன்ற குற்றங்கள்மலிந்து கிடக்கின்றன. ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது. மேற்கு வங்கத்தில் எங்குதொழில் செய்ய வேண்டுமானாலும், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த குண்டர்களுக்கு பணம் தர வேண்டிய சூழல் நிலவுகிறது. அவ்வாறு பணம் தராவிட்டால், அவர்கள் கொலை செய்யப்படுவதும், அவர்களின் சொத்துகள் சூறையாடப்படுவதும் தொடர் கதையாக மாறிவிட்டது.

மாநிலத்தில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று திரும்புவதே, மேற்கு வங்க பெண்களுக்கு பெரும் சவாலான காரியமாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

மாநிலத்தின் நிலை இவ்வாறு இருக்க, தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் முதல்வர் மம்தா பானர்ஜி, பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த மாநிலமாக மேற்கு வங்கம் விளங்குகிறது எனக் கூறுகிறார். ஆனால், உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும். நந்திகிராம் தொகுதிக்கு இன்று காலை (நேற்று) வந்த போது, ஒரு துயரச் செய்தியை கேள்விப்பட்டேன். நந்திகிராமில் ஒரு இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்திதான் அது. இதில் கூடுதல் சோகம் என்னவென்றால், தேர்தல் பிரச்சாரத்துக்காக மம்தா பானர்ஜி தங்கியுள்ள இடத்துக்கு மிக அருகாமையில்தான் அந்தக் குற்றம் நடந்திருக்கிறது.

முதல்வர் இருக்கும் பகுதிக்கு அருகிலேயே ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், மாநிலத்தில் உள்ள பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பார் கள்? இதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மேற்கு வங்க மக்களுக்கு வந்துவிட்டது. அராஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, வளர்ச்சி அரசியலை தேர்ந்தெடுக்க அவர்கள் தயாராகி விட்டார்கள். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அதற்கான தொடக்கமாக நந்திகிராம் தொகுதி இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

நந்திகிராமில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தால், மாநிலத்தின் மற்ற தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் தாமாகவே தோல்வி அடைந்துவிடும். இந்த தொகுதியில் மம்தா பானர்ஜி அடையும் தோல்வியானது, பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு பெரிய அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x