Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

மேற்கு வங்கத்தில் முஸ்லிம் கட்சியுடன் கூட்டணி: கேள்விக்குறியாகும் மார்க்சிஸ்ட், காங்கிரஸின் மதச்சார்பற்ற அரசியல்

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு வரும் 27-ம் தேதி முதல் ஏப்ரல்29-ம் தேதி வரை 8 கட்டங்களாகதேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையேதான் போட்டி என்ற ரீதியில் அங்கு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதனிடையே இடது சாரிகள், காங்கிரஸ் கட்சியுடன் இந்திய மதச்சார்பற்ற முன் னணி (இந்தியன் செக்யூலர் பிரன்ட்-ஐஎஸ்எஃப்) என்ற முஸ்லிம் கட்சி கூட்டணி வைத்துள்ளது.

இந்த கட்சியை தொடங்கி யுள்ளவர் முஸ்லிம் மதகுருவான அப்பாசுதீன் சித்திகி. இவர் தன் கட்சிக்கு இந்திய மதச்சார்பற்ற கட்சி என்று பெயர் வைத்தாலும், அதற்கு அடிப்படைவாத, மதவாத கட்சி என்ற பெயர் ஏற்கெனவே இருந்து வருவதுதான் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணியின் ‘மதச்சார்பற்ற’ கோஷத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்திகியின் ஏற்கெனவே பல மேடைகளில் பேசிய பேச்சுகள் மதம் சார்ந்தவையாக இருந்தமையால் அவர் மதச்சார்பற்ற என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தால் அதை எப்படி மக்கள் நம்புவார்கள் என்று பாஜக கேள்வி எழுப்பி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

சித்திகி முதலில் அசாசுதீன் ஒவைசி கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி முதலில் அழைக்கவே அந்தக் கூட்டணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சித்திகி கடுமையாக விமர்சித்து வந்தார்.

தெற்கு பர்கானா, வடக்கு பர்கானா, ஹூக்ளி, புர்த்வான், ஹவுரா, பிர்பும் போன்ற தெற்கிலுள்ள மேற்கு வங்க மாவட்டங்களில் இவருக்கு ஓரளவுக்குச் செல்வாக்கும் உள்ளது.

இவரை மதவாதச் சக்தியாக பாஜக பிரச்சாரம் செய்ய, இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியினரும் சித்திகி, ஏழைகளின் மேம்பாட்டுக்காக பாடுபடுகிறார் என்று பதில் அளித்து வருகின்றன.

கொல்கத்தாவின் பிரிகேட் அணிவகுப்பு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஎஸ்எஃப் பேரணியில் சித்திகி கலந்து கொண்டார். இந்நிலையில் ஐஎஸ்எஃப் போன்ற மதவாத கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது காந்தி, நேரு கொள்கைகளுக்கு எதிரானது என்றும், காங்கிரஸ் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு விரோதமானது என்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுவதாகத் தெரியவந்துள்ளது.

இதேபோன்ற எதிர்ப்பு மனநிலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் உருவாகியுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி மேலிடத் தலைமை எடுத்த முடிவால் தற்போது எதுவும் பேசாமல் மாநிலத் தலைவர்கள் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x