Last Updated : 12 Nov, 2015 07:58 AM

 

Published : 12 Nov 2015 07:58 AM
Last Updated : 12 Nov 2015 07:58 AM

இந்தியாவின் நவீன தொலைத்தொடர்பு: ஜிசாட் -15 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

மேலும் 2 செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

இந்தியாவின் நவீன தொலைத் தொடர்பு செயற்கைக்கோள் ‘ஜிசாட்-15’தென் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானா விண்வெளி மையத்திலிருந்து நேற்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்ப‌ட்டது.

நாட்டின் தொலைத் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு, இணையதள மேம்பாடு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவையை மேம்படுத்த ‘ஜி-சாட்-15’ என்ற அதி நவீன செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. இந்த செயற்கை கோள் பிரான்ஸ் நாட்டிலுள்ள கயானா விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 3.04 மணிக்கு ‘ஏரியன்-5 வி.ஏ.227’ ராக்கெட் மூலம் வெற்றிகரமாக‌ விண்ணில் செலுத்தப்பட்ட‌து. இந்தியாவின் இந்த செயற்கைக் கோளுடன் அரபு தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘அரபு சாட்-6B’ செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது.

‘ஜிசாட்-8,’ ‘ஜிசாட்-10’ ஆகிய செயற்கைக்கோள்களை தொடர்ந்து இந்தியா சார்பாக 3-வதாக ஏவப்பட்டுள்ள ‘ஜிசாட்-15’ செயற்கைக்கோள் 3164 கிலோ எடை கொண்டது. 12 ஆண்டுகள் ஆயுட் காலம் கொண்ட ‘ஜிசாட்-15’ செயற்கைக்கோளில் க்யூ பேண்ட்-டில் 24 தகவல் செயலிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள் விண்வெளி கோள்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பிறகு, தகவல் பரிமாற்றத்துக்கான சமிக்ஞைகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.

அப்போது ‘ஜிசாட்-15’ செயற்கைக் கோளின் செயல் பாடுகள் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். தேவையான உத்தரவுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே விஞ்ஞானிகள் அளிப்பார்கள். இந்த செயற்கைக்கோள் மூலம் க்யூ(Ku) பேண்ட் பயனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்க முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன‌ர்.

இதனிடையே, ‘ஜிசாட் -15’ செயற்கைக்கோளை தொடர்ந்து இஸ்ரோ ‘ஜிசாட்-17,’ ‘ஜிசாட்-18’ ஆகிய இரண்டு தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்களை தயாரித்து வருகிறது. இந்த செயற்கைக் கோள்கள் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்பப்ப‌டும். இந்த இரு செயற்கைக்கோள்களும் ஏரியன் ராக்கெட்டுகள் மூலம் பிரான்ஸ் நாட்டின் கயானாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். இதன் எடை தலா 3400 கிலோ ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x