Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM

கொடூர குற்றங்களின் பாதிப்புகளைவிட மாசு ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம்: உ.பி. அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

உத்தர பிரதேசத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான தாஜ்மகாலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தாஜ்மகாலின் அருகில் ஓடும் யமுனை நதி நீர் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்கவும் யமுனை நதியை தூய்மைப்படுத்தவும், கங்கை நதி மற்றும் அருகில் உள்ள ஹிண்டன் நதிகளில் இருந்து யமுனைக்கு தண்ணீரை அதிகமாக திருப்பிவிட ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்மூலம் யமுனையில் நீரோட்டம் அதிகரித்து துர்நாற்றம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உ.பி.யில் கலி நடி, கிருஷ்ணா, ஹிண்டன் போன்ற சிறிய நதிகளின் தண்ணீரும் அசுத்தமாக உள்ளது. இதனால் அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் பலவித நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்க, நதிகளை உடனடியாக தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தேசியபசுமை தீர்ப்பாயத்தில், ‘தவோபாபர்யாவரன் சமிதி’ என்ற என்ஜிஓவழக்கு தொடுத்தது. இந்த வழக்கை பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்து நேற்று அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

உ.பி. நதிகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிப்பதால் எந்தப் பயனும் இல்லை. சம்பந்தப்பட்டஅதிகாரிகள் இதற்கு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை, கடமையை செய்யும் வரை எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. மாநில அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரிவர செய்யாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நதி நீர் அசுத்தம் பற்றி மாநில உயரதிகாரிகளின் கவனத்துக்கு வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட பல துறைகளுடன் ஆலோசித்து தலைமைச் செயலர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. கொடூர குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைவிட, மாசுபாட்டால் ஏற்படும்பாதிப்புகள் அதிகம். எனவே,உ.பி. தலைமைச் செயலர் உடனடி யாக இதில் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். நதி நீர் தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கீடு உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஹிண்டன் உட்பட நதிகளை தூய்மைப்படுத்தும் செயல்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த உ.பி. நதிநீர் புத்தாக்க கமிட்டிக்கும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x