Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

விவசாயிகள் போராட்டத்தை வைத்து வெளிநாட்டில் இருந்து காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் புதுப்பிக்க சதி: காவல் துறை அதிகாரி திடுக்கிடும் தகவல்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் ஊடுருவியிருப்பதாக டெல்லி காவல் துறை ஏற்கெனவே தெரிவித்தது. மேலும், பாகிஸ்தான் ஆதரவுடன் அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கனடாவில் செயல்பட்டு வரும் ‘பொயட்டிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷன்’ இயக்கத்தின் நிறுவனர் மோ தாலிவால் என்பவர் அண்மையில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்திய குடியரசு தினத்தன்று கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெளியே, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக சில சீக்கிய அமைப்புகள் உள்ளிட்ட இயக்கங்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின. அதற்கு தலைமை வகித்து மோ தாலிவால் பேசியுள்ளார். அவரது பேச்சில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களாவன:

வேளாண் சட்டங்களை இந்திய அரசு நாளைய தினம் நீக்கினால் கூட, அது நமக்கு உண்மையான வெற்றி கிடையாது. இந்தப் போராட்டம்தான் நமது யுத்தத்தின் ஆரம்பம். வேளாண் சட்டங்கள் நீக்கப்பட்டால் இந்தப் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என யாரேனும் கூறினால் அதனை ஏற்காதீர்கள். இவ்வாறு கூறுவதன் மூலம், அவர்கள் உங்களை பஞ்சாபி இல்லை என தெரிவிக்கிறார்கள். நீங்கள் காலிஸ்தான் இயக்கத்தில் இல்லாதவர் எனக் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. இவ்வாறு மோ தாலிவால் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:

விவசாயிகள் போராட்டத்தை வைத்து காலிஸ்தான் இயக்கத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க பெரிய அளவில் சதி நடந்து வருகிறது. மோ தாலிவாலின் உரை அடங்கிய வீடியோ இதனை மேலும்உறுதிப்படுத்துவதாக உள்ளது.

பஞ்சாப் இளைஞர்களை தூண்டும் வகையில் அவரது பேச்சு இருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து இந்திய அரசுக்கு எதிராக அவர் வெளியிட்ட ஆவணத்தைதான் (டூல் கிட்), பருவநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் முதலில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அது சர்ச்சையான பிறகே, அதனை அவர் நீக்கினார்.

இவ்வாறு காவல் துறை அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x