Published : 03 Jun 2014 08:03 AM
Last Updated : 03 Jun 2014 08:03 AM

குல்பர்காவில் வேன்- பஸ் மோதல்: ஒரே குடும்பத்தில் 15 பேர் பலி; நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றபோது சோகம்

கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே திங்கள்கிழமை அதிகாலை அரசு பஸ், மினி வேன் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப் பூர் மாவட்டம் அக்கல்கோட் அருகேயுள்ள தத்வால் கிராமத் தைச் சேர்ந்த 26 பேர், கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள கவாஜ் பண்டே நவாஸ் தர்காவுக்கு நேர்த்திக்கடன் செலுத்த மினி வேனில் திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டனர். அதிகாலை 5.30 மணிக்கு குல்பர்கா அருகேயுள்ள‌ ஆலந்த் டவுன் பகுதிக்கு அருகேயுள்ள கொதலதங்கரா என்ற இடத்துக்கு அருகே மினி வேன் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த‌ கர்நாடக அரசு பஸ், மினி வேன் மீது மோதியது. இரண்டு வாகனங்களும் மிக வேகமாக மோதிக் கொண்டதால் மினி வேன் சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. இதில் மினி வேனின் ஓட்டுநர் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்க போலீஸாரும் ஆம்புலன் ஸும் வர தாமதமானதால் மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லும் வழியில் 2 பேர் பலியாகினர். விபத்தில் பலியான 15 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில் 3 குழந்தைகளும் 5 பெண்களும் அடங்குவர்.

மினி வேனின் மீது மோதிய அரசு பஸ்ஸின் ஓட்டுநர், நடத்துநர் உட்பட 8 பேரும் வேனில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக‌ குல்பர்கா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தில் உயிரிழந்த பாஷா முல்லா (60), நபி முல்லா (51), முஹீமின் பி நபி சாப் (50) , ரம்ஜான் முல்லா (21), மொன்ஷி முல்லா(14), பாபு ஷா முல்லா (5), பர்வீன் முல்லா (3) உள்ளிட்ட 15 பேரையும் உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

விபத்து குறித்து தகவல‌றிந்த கர்நாடக மாநில‌ வக்பு அமைச்சர் உமர் உல் இஸ்லாம் சம்பவ இடத்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை யும் பார்வையிட்டார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவையும் மகாராஷ்டிர முதல்வர் பிருத்வி ராஜ் சவாணையும் தொடர்பு கொண்டு விபத்து குறித்த விவரங் களை அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x