Last Updated : 02 Feb, 2021 11:49 AM

 

Published : 02 Feb 2021 11:49 AM
Last Updated : 02 Feb 2021 11:49 AM

மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் ஊற்றிய செவிலியர்கள்: 12 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

மகாராஷ்டிர மாநிலம், யாவத்மால் மாவட்டத்தில் போலியா சொட்டு மருந்து வழங்குவதற்கு பதிலாக கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரை ஊற்றிய செவிலியர்களால் 12 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் பச்சிளங்குழந்தை முதல் 5 வயதுவரை உள்ள குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கடந்த 31-ம் தேதி நடந்தது. இந்த நாளில் சொட்டு மருந்து பெறத் தவறிய குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் அடுத்த சில நாட்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.

அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம், யாவத்மால் மாவட்டம், கப்ஸிகோப்ரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று குழந்தைகளுக்குப் போலியா சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஆனால், அங்கு பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு பதிலாக கைகளைச் சுத்தப்படுத்தும் சானிடைசரை வழங்கியுள்ளனர்.

சானிடைசர் வழங்கப்பட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதையடுத்து, அந்தக் குழந்தைகள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அந்த 12 குழந்தைகளின் உடல்நிலையும் இயல்பு நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு சானிடைசர் ஊற்றிய ஆஷா பணியாளர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து யாவத்தமால் ஜில்லா பரிசத் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா பஞ்சால் கூறுகையில், “ குழந்தைகளுக்கு சானிடைசர் ஊற்றிய விவகாரத்தில் ஆஷா பணியாளர்கள் 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த துரதிர்ஷ்டமான சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம்.

ஏற்கெனவே 15 நாட்கள் முறையான பயிற்சி அளித்துதான் சொட்டு மருந்து வழங்க அனுமதித்தோம். ஆனால், யாரும் பயிற்சியின் போது வழங்கப்பட்ட வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை எனத் தெரிகிறது. கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்து குழந்தைகளைத் தொட வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தோம்.

இதுபோன்ற கவனக்குறைவான செயல்களை அனுமதிக்க முடியாது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x