Last Updated : 07 Oct, 2015 07:09 PM

 

Published : 07 Oct 2015 07:09 PM
Last Updated : 07 Oct 2015 07:09 PM

96% மதிப்பெண் எடுத்தும் வேலை மறுத்த ரயில்வே நிர்வாகம்: பிரதமர் மோடியின் உதவியை நாடிய நபர்

ரயில்வே பணியாளர் தேர்வுக்குழு நடத்திய தேர்வில் 96% மதிப்பெண் எடுத்த டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் பணிநியமனத்துக்கு தேர்வு செய்யப்படாததால் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடியுள்ளார்.

டிசம்பர் 2013-ல், 31 வயது லலித் குமார் வடக்கு மண்டல ரயில்வே துறை குரூப் டி தேர்வு எழுதினார். முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது இவரைத் தேர்வு செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதில் ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்ந்த லலித் குமார் தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு மனு செய்தார்.

ஓராண்டுக்குப் பிறகு ஆர்டிஐ பதில் கிடைத்தது. அதில் கட் ஆஃப் மார்க்குக்கு மிக அதிகமாக இவர் மதிப்பெண்கள் எடுத்திருப்பது தவறான வழிமுறைகளை கடைபிடித்தே என்று ஆர்டிஐ பதில் கிடைத்தது.

இந்தப் பதிலிலும் திருப்தி அடையாத லலித் குமார் மத்திய தகவல் அலுவலகத்தை அணுகியுள்ளார். இவரது தீவிர முயற்சியைப் பார்த்த அதிகாரிகள் மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு பதிவு செய்ய அறிவுறுத்தினர்.

“நான் முதல் தீர்ப்பாய ஆணையம் மற்றும் மத்திய தகவல் ஆணையதிடம் மேல்முறையீடு பதிவு செய்தேன்” என்றார் லலித் குமார்.

முதல் தீர்ப்பாய ஆணையம் பதில் அளிக்கவில்லை எனினும் மத்திய தகவல் ஆணையம் ஜூலை,2015-ல் விசாரணை நடத்த முடிவு செய்தது.

இதனையடுத்து ஆகஸ்ட் 10-ம் தேதி தவறான வழிகளில் இவர் இத்தகைய மதிப்பெண்களை பெற்றார் என்று கூறிய மத்திய தகவல் அலுவலருக்கு 30 நாட்களுக்குள் காரணங்களை விளக்குமாறு கோரியது.

லலித் குமார் மேலும் கூறும்போது, “நான் ஏமாற்றினேன், அல்லது முறையற்ற வழிகளைப் பயன்படுத்தினேன் என்று அவர்களால் நிரூபிக்க முடியுமா? அவர்கள் இதனை நிரூபிக்கட்டும் என்று நான் சவால் விடுகிறேன்” என்றார்.

தனது குடும்ப வாழ்வாதாரத்திற்காக டெல்லி போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார் லலித் குமார்.

“நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். எனவே இந்த ரயில்வே தேர்வு முடிவுகள் எங்கள் குடும்பத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

எனவே கடைநிலை தஞ்சமாக எனக்கு நீதிகிடைக்க வழிவகை செய்யுமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இதுவே எனது கடைசி முயற்சி” என்றார் லலித் குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x