Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

விவசாயிகளுடன் நாளை பேச்சுவார்த்தை: 40 சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் நாளை 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லியில் நேற்று 33-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு, விவசாய சங்கங்கள் இடையே இதுவரை 5 சுற்றுபேச்சுவார்த்தை நடைபெற் றுள்ளது.

அடுத்த சுற்று பேச்சு வார்த்தைக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அழைப்பு விடுத்தார். இதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.

இந்த பின்னணியில் மத்திய வேளாண் துறை செயலாளர் சஞ்சய் அகர்வால், 40 விவசாய சங்கங்களுக்கு நேற்று கடிதம்அனுப்பினார். அதில் கூறியிருப் பதாவது:

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் டிசம்பர் 30-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் நடைபெறும். இதில் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும். விவசாயி களுடன் திறந்து மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகேத் கூறும்போது, "மத்திய அரசுடன் 6-வது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளோம். அப்போது 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது குறித்தும் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல் செய்வது குறித்தும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

டெல்லியில் 33-வது நாளாக போராட்டத்தை நடத்துகிறோம். எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.

6-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஆலோசிக்க வேண்டிய 4 முக்கிய கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

இதன்படி வேளாண் சட்டங் களை வாபஸ் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம்தொடரும் என்பதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் கழிவுகளை எரிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். மின்சார திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யவேண்டும் ஆகிய 4 நிபந்தனைகளை விவசாயிகள் முன்வைத் துள்ளனர்.

25 சங்கங்கள் ஆதரவு

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25 விவசாய சங்கங்களின் தலைவர்கள், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது புதிய வேளாண் சட்டங்களுக்கு அவர்கள் முழு ஆதரவு தெரி வித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் என்னை சந்தித்துப் பேசினர். புதிய வேளாண் சட்டங்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

அமைச்சர்கள் ஆலோசனை

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் நேற்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது, விவசாயிகளுடனான 6-வது சுற்று பேச்சுவார்த்தையின்போது அரசு தரப்பில் எடுத்துரைக்க வேண்டிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x