Last Updated : 16 Dec, 2020 01:48 PM

 

Published : 16 Dec 2020 01:48 PM
Last Updated : 16 Dec 2020 01:48 PM

தமிழகம், கேரளா, மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியா?- மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கத் தேவையான வசதிகளை வழங்க தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது என மத்திய அரசுக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்களை தபால் வாக்குகள் மூலம் தேர்தலில் வாக்களிக்க அனுமதிப்பது குறித்து பரவலாக விவாதங்களையும், ஆலோசனைகளையும் மத்திய அரசு நடத்தி வருவதால், இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாமல், இந்தியாவில் வாக்குரிமை இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க அனுமதிப்பது குறித்து தேர்தல் விதிமுறையில் திருத்தம் கொண்டுவருவது உள்ளிட்ட சில திட்டங்களை மத்திய அரசுக்குத் தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ளது. ஆனால், அவை இன்னும் தீவிர ஆலோசனைக் கட்டத்தில்தான் இருக்கின்றன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் வசிக்கும் வாக்களிக்கத் தகுதியுள்ள இந்தியர்களுக்கு சர்வீஸ் வாக்குகள் அளிக்கத் தேவையான மின்னணுப் பரிமாற்ற தபால் வாக்களிக்கும் முறையை (இடிபிபிஎஸ்) மத்திய அரசுக்கு வழங்கத் தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கடந்த மாதம் 27-ம் தேதி மத்திய சட்டத்துறைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இடிபிபிஎஸ் மூலம் வாக்களிக்கும் முறையைத் தேர்தல் ஆணையம் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது என்பதால், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் இந்தியாவில் வாக்குரிமை இருந்தால், அவர்களும் தேர்தலில் வாக்களிக்க இந்த முறையைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களுக்குள் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இடிபிபிஎஸ் முறையைச் செயல்படுத்தவும், இந்த வசதிகளை வழங்கவும் நிர்வாகரீதியாகத் தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலர், இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இருந்தும் அவர்களால் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் இருக்கிறார்கள். தேர்தலுக்காக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வாக்களிக்க இந்தியா வரத் தயாராக இல்லை. ஆதலால், அவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்கக் கோரி தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது கரோனா வைரஸ் பரவல் இருப்பதால் மேலும் அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 62-ன்கீழ், தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தங்களின் வாக்கைத் தேர்தலின்போது பதிவு செய்யலாம். ஆதலால், தகுதியுள்ள அனைத்து வாக்காளர்ளுக்கும் வாக்களிக்கும் உரிமை, வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு எந்த மாநிலத்தில், எந்தத் தொகுதியில், ஊரில் வாக்களிக்க உரிமை இருக்கிறதோ அங்கு வாக்குகளைச் செலுத்தலாம்.

தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்துள்ள அதிகாரபூர்வமற்ற தகவலின்படி, 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வெளிநாட்டு இந்தியர்கள்தான் தேர்தலின்போது வாக்களிக்க இந்தியா வருகிறார்கள். மற்ற இந்தியர்கள் பயணச் செலவு கருதி வருவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

இடிபிபிஎஸ் முறையின் கீழ், தபால் வாக்குகள் மின்னணு முறையில் சர்வீஸ் வாக்குகளாகச் செல்லும். சர்வீஸ் வாக்குகள் அளிக்கும் வாக்காளர் குறிப்பிட்ட படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் வாக்களிக்க இருக்கும் கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு அதைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த தபால் வாக்கு, வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில் காலை 8 மணிக்குள் சேர வேண்டும்.

போலீஸார், ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள், தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் இதுபோன்ற முறையில்தான் வாக்களிக்கின்றனர்.

இந்த முறையைத்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதேபோல, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய தபால் வாக்குகள் முறையைத் தேர்வு செய்யலாம். ஆனால், அவர்களுக்கு இடிபிபிஎஸ் முறை வேறுபட்டதாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x