Last Updated : 10 Dec, 2020 01:06 PM

 

Published : 10 Dec 2020 01:06 PM
Last Updated : 10 Dec 2020 01:06 PM

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை கவலைக்கிடம்: மருத்துவமனைக்கு முதல்வர் மம்தா, ஆளுநர் வருகை

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா: கோப்புப் படம்.

கொல்கத்தா

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆட்சி நடந்தபோது, கடந்த 2000 முதல் 2011ஆம் ஆண்டுவரை முதல்வராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்து இறங்கியதும், புத்ததேவ் பட்டாச்சார்யா கடந்த 2015-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார், அதன்பின் 2018-ல் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.

முதுமை, உடல்நலக் கோளாறு காரணமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியாததால் ஒதுங்கினார். 76 வயதாகும் பட்டாச்சார்யாவுக்கு நாள்பட்ட நுரையீரல் தொடர்பான நோய்களும், முதுமை காரணமாக வரும் நோய்களும் தொடர்ந்து இருந்து வந்தன.

இந்நிலையில் நேற்று பிற்பகல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பட்டாச்சார்யா அனுமதி்க்கப்பட்டார்.

புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு மூச்சுத்திணறல் இருந்ததையடுத்து, உடனடியாக கோவிட் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பட்டாச்சார்யாவுக்குக் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “பட்டாச்சார்யாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் இருந்தாலும், ஆபத்தான கட்டத்தை அவர் கடக்கவில்லை. 5 மருத்துவர்கள் குழுவினர் அடுத்தகட்டமாக என்ன சிகிச்சை அளிக்கலாம் என ஆலோசித்து வருகின்றனர். பட்டாச்சார்யா வென்டிலேட்டர் சிகிச்சையில் சுயநினைவுடன் இருக்கிறார்.

சிகிச்சைக்கு ஏற்ப அவரது உடல்நிலை ஒத்துழைத்து வருகிறது. தொடர்ந்து இதுபோல் உடல்நிலை ஒத்துழைக்கும் என நம்புகிறோம். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது.

இதயநோய் சிறப்பு மருத்துவர், நுரையீரல் சிறப்பு மருத்துவர் உள்பட 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து பட்டாச்சார்யாவின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே பட்டாச்சார்யாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்து உடனடியாக முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தனகர் ஆகியோர் மருத்துவமனைக்கு இரவு வந்து பார்த்துச் சென்றனர்.

பட்டாச்சார்யா விரைவில் உடல்நலம் பெற்று, இல்லம் திரும்பப் பிரார்த்திப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x