Last Updated : 07 Oct, 2015 05:26 PM

 

Published : 07 Oct 2015 05:26 PM
Last Updated : 07 Oct 2015 05:26 PM

நாகரிகத்துக்கு களங்கம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது: தாத்ரி விவகாரத்தில் பிரணாப் கருத்து

நாட்டின் நாகரிகத்துக்கும் பெருமைக்கும் இழுக்கு விளைவிக்கும் வகையிலான சம்பவங்களுக்கு அரசு ஒருபோதும் இடம் தராது என்று தாத்ரி சம்பவத்தை குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்திய நாகரிகம் கொண்டுள்ள பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையை மனதில் வைத்து நடக்க வேண்டியது அவசியம். முக்கிய மதிப்பீடுகளை மனதில் ஆழமாக பதிய வைத்து கொள்ள வேண்டும். அதற்கு களங்கம் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. கொண்டாடப்பட வேண்டிய நமது மரபை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.

நூற்றாண்டு காலமாக கட்டிக் காத்து வந்த மரபை பாதுகாக்க வேண்டும். இன்னும் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கும்போது, மக்களிடையே சகிப்புத்தன்மையை உடைக்கக் கூடாது. நமது நாகரீகத்துக்கு இழுக்கு விளைவிக்கும் வகையிலான சம்பவங்களை இந்திய அரசும் ஒருபோதும் அனுமதிக்காது.

பண்டைய நாகரிகங்கள் பல தற்போது அழிந்துவிட்டன. ஆனால் பல்வேறு ஆக்கிரமிப்புக்கும் நீண்ட கால அயல் நாட்டு ஆட்சி அதிகாரத்தையும் தாண்டி நமது நாகரீகம் தழைத்து நிற்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு காரணம் நமது நாகரீகம் மீது பிறர் கொண்டுள்ள மதிப்பையும் காட்டுகிறது என்பதை உணர வேண்டும்.

இதனை நாமும் மனதில் கொண்டால் நமது ஜனநாயகத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது." என்றார்.

உத்தரப் பிரதேசத்தின் கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியது. இதில் இக்லாக் அதே இடத்தில் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x