Published : 07 Oct 2015 06:47 PM
Last Updated : 07 Oct 2015 06:47 PM

பசுக்களின் நலன் காக்கும் பொருளாதாரத்தை வளர்க்க ராஜஸ்தான் அரசு தீவிரம்

பசுக்களின் நலன் காக்கும் பொருளாதாரத்தை வளர்க்க ராஜஸ்தான் மாநில அரசு தீவிரம் காட்டுகிறது. இதன்மூலம் கிடைக்கும் லாபங்களை பொதுமக்கள் உணரும் வகையில் பசுவினால் கிடைக்கும் தயாரிப்புகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசின் பசு நலன் வளர்ச்சித்துறை அமைச்சகம் சார்பில் பசுவின் கோமியத்தில் இருந்து கொசு விரட்டியும், சாணத்தில் இருந்து அகர்பத்தியும் தயாரிக்கப்பட உள்ளது. இந்த புதிய தயாரிப்புகளுக்கு ஹரியானாவில் உள்ள ‘கௌரக்ஷக் (பசு பாதுகாப்பு)’ அமைப்பு உதவி வருகிறது. ஒரு லிட்டர் கோமியத்தில் 5 மில்லி லிட்டர் கொண்ட 20 பாக்கெட் கொசு விரட்டி தயாரிக்கப்பட உள்ளது.

இதன்மூலம், அரசுக்கு ஒரு லிட்டர் கோமியம் விநியோகிப்பவர்கள் ரூபாய் 200 லாபம் பெறும்படி திட்டமிடப்பட்டு வருகிறது. இத்துடன், பசுவின் சாணியில் சில மூலிகைகளை சேர்த்து அகர்பத்திகள் தயாரிப்பதுடன், அவற்றை யாகம் செய்யும் குண்டங்களின் அக்னியிலும் பயன்படுத்தும்படியும் எருவட்டிகள் செய்ய இருக்கிறார்கள்.

இது குறித்து அம் மாநில பசு நலன் வளர்ச்சித்துறை அமைச்சரான ஒட்டாரம் தேவாஸி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பால் தராத பசுக்களின் மூலம் கிடைக்கும் பலனை பொதுமக்களுக்கு உணர வைப்பதன் மூலம் தான் அதை காக்க முடியும். இதன் சாணி மற்றும் கோமியமே நாள் ஒன்றுக்கு ரூபாய் 300 வரை லாபம் தரக்கூடியது. எனவே, இங்கு பசுவிற்காக ஒரு சரணாலயம் அமைப்பதுடன் அதன் காப்பகங்களையும் நவீனப்படுத்த உள்ளோம்.’ எனத் தெரிவித்தார்.

இதில், உபியின் தாத்ரி சம்பவம் குறித்து எழுந்த கேள்விக்கு அமைச்சர் தேவாஸி, ‘ஒரு இந்து பசுவைக் கொல்பவராக இருந்தால் அவர் ஒரு இந்துவாக இருக்க முடியாது. பசு இந்த நாடு முழுவதும் உள்ளவர்களுக்கு சொந்தமானது தவிர, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் அல்ல, ஏராளமான முஸ்லீம்களும் பசுவின் நலன் காக்க தம் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ராஜஸ்தானில் பல உதாரணங்கள் உண்டு. எனவே, பசுவை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் வளர்க்க வேண்டும் என்பது கிடையாது.’ எனப் பதில் அளித்தார்.

நாட்டிலேயே முதன் முறையாக பசுவிற்காக ஒரு தனி அமைச்சகம், பாரதிய ஜனதா ஆளும் ராஜஸ்தானில் கடந்த வருடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மாநில அமைச்சராக ஒட்டாராம் தேவாஸி பதிவி வகிக்கிறார். சாதுவான இவர் அரசியல்வாதியாக மாறி தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். இவர் தன் அமைச்சகத்தின் முதலாவது அமைச்சராகப் பதவி ஏற்றது முதல் பசுவின் நலனுக்காக பல புதிய முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால், அம் மாநில முதல் அமைச்சரான வசுந்துரா ராஜே, மற்ற அனைத்து அமைச்சகங்களை விடக் குறைவான நிதியாக பசு நலன் வளர்ச்சித்துறைக்கு கடந்த பட்ஜெட்டில் ரூபாய் ஐந்து கோடி ஒதுக்கி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x