Published : 03 Oct 2020 06:47 PM
Last Updated : 03 Oct 2020 06:47 PM

காங்கிரஸ் ஆட்சியில் ஆமை வேகத்தில் நடந்த சுரங்கப்பாதை பணி; 3 மடங்கு செலவு அதிகரிப்பால் பெரும் இழப்பு: பிரதமர் மோடி கடும் சாடல்- முழு உரை

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆமை வேகத்தில் நடந்த சுரங்கபாதை பணியால் 3 மடங்கு செலவு அதிகரித்து நாட்டிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை - அடல் சுரங்கப் பாதையை மணாலியில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார்.

9.02 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை, மணாலி - லாஹுல் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்கிறது. இதற்கு முன்பு இந்த பள்ளத்தாக்கு, ஒவ்வொரு ஆண்டும் கடும் பனிப்பொழிவு காரணமாக, துண்டிக்கப்பட்டிருக்கும்.

இமயமலையின் பிர் பஞ்சால் மலைத் தொடரில், அதி நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் (10,000 அடி) உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதை, மணாலி மற்றும் லே இடையே 46 கி.மீ தூரத்தையும், 4 முதல் 5 மணி நேர பயணத்தையும் குறைத்துள்ளது.

இந்த சுரங்க பாதையில், காற்றோட்டம், தீயணைப்பு, வெளிச்சம் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட நவீன மின் இயந்திர அமைப்புகளைக் கொண்டுள்ளது. சுரங்கப்பாதையில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

சுரங்கப் பாதையின் தெற்கு நுழைவு வாயிலில் இருந்து வடக்க நுழைவுவாயில் வரை பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். பிரதான சுரங்கப்பாதையில் கட்டப்பட்ட, அவசரகால சுரங்க பாதையையும் அவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அடல் சுரங்கப்பாதை உருவாக்குதல் குறித்த பட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் தொலை நோக்கு மற்றும் இப்பகுதி மக்களின் நீண்ட கால கனவு நனவாகியுள்ளதால்,இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள் என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அடல் சுரங்கப்பாதை இமாச்சலப் பிரதேசத்தின் பெரும்பகுதிக்கும், புதிய யூனியன் பிரதேசமான லே-லடாக்கிற்கும் உயிர்நாடியாக இருக்கப் போகிறது என்றும் மணாலிக்கும் கீலாங்கிற்கும் இடையிலான தூரத்தை 3-4 மணி நேரம் குறைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் லே-லடாக் பகுதிகளின் சில பகுதிகள், தற்போது நாட்டின் பிற பகுதிகளுடன் எப்போதும் இணைந்திருக்கும் மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அவர் மேலம் தெரிவித்தார்.

விவசாயிகள், தோட்டக்கலை விவசாயிகள், இளைஞர்கள் ஆகியோர் தலைநகர் தில்லிக்கும், இதர மார்க்கெட் பகுதிக்கும் இனி எளிதாக செல்ல முடியும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இதுபோன்ற எல்லை இணைப்பு திட்டங்கள், பாதுகாப்பு படையினருக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும், அவர்களின் ரோந்து பணிக்கும் உதவியாக இருக்கும் என பிரதமர் கூறினார்.

இந்த கனவை நனவாக்குவதில் தங்கள் உயிரை பணயம் வைத்த பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.

அடல் சுரங்கப்பாதை, இந்தியாவின் எல்லை உள்கட்டமைப்பிற்கு புதிய பலத்தை அளிக்கப் போவதாகவும், உலகத் தரம் வாய்ந்த எல்லை இணைப்பிற்கு, இது ஒரு வாழ்க்கை சான்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார். எல்லைப் பகுதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நீண்டகால கோரிக்கை இருந்தபோதிலும், எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் பல தசாப்தங்களாக கஷ்டப்படுவதற்கு மட்டுமே திட்டங்கள் முன்பு உருவாக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

இந்த சுரங்கப்பாதைக்கான சாலை திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கடந்த 2002-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டியதாக பிரதமர் கூறினார். வாஜ்பாய் அரசுக்குப்பின், இந்த சுரங்க பாதை பணி மிகவும் புறக்கணிக்கப்பட்டதால், 1300 மீட்டர் மட்டுமே அதாவது 1.5 கி.மீ க்கும் குறைவான சுரங்கப்பாதை 2013-14 வரை அமைக்க்பபட்டதாக அவர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மீட்டர் மட்டுமே இந்த பணிகள் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வேகத்தில் பணி நடந்தால், இந்த சுரங்கப்பாதை 2040-ம் ஆண்டுதான் முடியும் என நிபுணர்கள் அப்போது தெரிவித்தனர். இந்த பணியை மத்திய அரசு ஆண்டுக்கு 1400 மீட்டராக துரிதப்படுத்தியதாக பிரதமர் கூறினார். 26 ஆண்டுகள் மதிப்பிடப்பட்ட இத்திட்டத்தை, 6 ஆண்டுகளில் முடிக்க முடிந்ததாக பிரதமர் கூறினார்.

நாடு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முன்னேற வேண்டியிருக்கும் போது, உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும் என அவர் கூறினார். இதற்கு அரசியல் விருப்பமும், தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தேவை என்று நரேந்திர மோடி கூறினார்.

இதுபோன்ற முக்கியமான மற்றும் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவு செய்வதில், தாமதம் நிதி இழப்புகளை ஏற்படுத்துகிறது மற்றும் மக்களுக்கு பொருளாதார மற்றும் சமூக நலன்களை இழக்கச் செய்கிறது.

கடந்த 2005ம் ஆண்டு இந்த சுரங்கப்பாதை கட்டுமான செலவு ரூ.900 கோடியாக இருந்தது. தொடர் தாமதம் காரணமாக, 3 மடங்கு அதிக செலவுடன் ரூ.3,200 கோடி செலவில் தற்போது இத்திட்டம் முடிவடைந்துள்ளது. அடல் சுரங்கப் பாதை போல், பல முக்கிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என பிரதமர் கூறினார்.

லடாக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தவுலத் பெக் ஓல்டி விமான தள ஓடு பாதையை விமானப்படை விரும்பினாலும், 40 முதல் 45 ஆண்டுகளாக அது முடிவடையாமல் இருந்தது. போகிபீல் பாலத்தின் பணிகளும் அடல் ஆட்சி காலத்தில் தொடங்கின, ஆனால் அதன் பணிகள் பின்னர் குறைந்துவிட்டன என்று பிரதமர் கூறினார். இந்த பாலம் அருணாச்சலுக்கும் வடகிழக்கு பிராந்தியத்திற்கும் இடையிலான முக்கிய இணைப்பை வழங்குகிறது. 2014 க்குப் பிறகு இந்த பணி வேகம் அடைந்தது என்றும், அடல் ஜி பிறந்தநாளை முன்னிட்டு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது என்றும் பிரதமர் கூறினார்.

பிஹாரின் மிதிலாஞ்சல் பகுதியில் கோசி பெரிய பாலத்துக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் அடிக்கல் நாட்டினார் என்றும், 2014ம் ஆண்டுக்குப்பின் அதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டதால், அந்த பாலம் சில வாரங்களுக்கு முன் திறக்கபட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நிலைமை தற்போது மாறியுள்ளதாகவும், கடந்த 6 ஆண்டுகளில், எல்லை கட்டமைப்பு, முழு வேகத்துடன் மேம்படுத்தப்படுவதாக பிரதமர் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பு படையினரின் தேவைகளை கவனித்துக்கொள்வது அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று பிரதமர் கூறினார். ஆனால் இதுவும், முன்னர் சமரசம் செய்யப்பட்டு, நாட்டின் பாதுகாப்புப் படைகளின் நலன்களும் சமரசம் செய்யப்பட்டன என பிரதமர் கூறினார்.

பாதுகாப்பு படையினருக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், நவீன போர் விமானங்கள், ஆயுதங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாகவும், இவற்றையெல்லாம் முந்தைய அரசு கிடப்பில் போட்டதாகவும், பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார். இவற்றை நிறைவேற்ற முந்தைய அரசுகளுக்கு, அரசியல் விருப்பம் இல்லை எனவும், நாட்டில் இந்த சூழல் இன்று மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ராணுவ தளவாட தயாரிப்பில் அன்னிய நேரடி முதலீடுக்கு தளர்வுகள் அளிக்கும் வகையில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் நவீன ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்க முடியும் என பிரதமர் கூறினார்.

முப்படை தலைமை தளபதி பதவியை உருவாக்கும் வகையில் சீர்திருத்தம் செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் பாதுகாப்பு படைகளின் தேவைக்கேற்ப உற்பத்தி மற்றும் கொள்முதலில் ஒருங்கிணைப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

வளர்ந்து வரும் இந்தியாவின் உலகளாவிய நிலைக்கு ஏற்ப, நாட்டின் கட்டமைப்புகளையும், பொருளாதாரத்தையும், யுக்திகளையும் மேம்படுத்த வேண்டும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

தற்சார்பு இந்தியா திட்ட தீர்மானத்துக்கு, அடல் சுரங்கப்பாதை ஜொலிக்கும் உதாரணம் என பிரதமர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x