Published : 14 Sep 2020 07:09 AM
Last Updated : 14 Sep 2020 07:09 AM

மலையில் இருந்து மழை தண்ணீர் வருவதற்காக 30 ஆண்டுகளாக பாடுபட்டு கால்வாய் வெட்டிய கிராமவாசி

கிராமத்து வயல்களுக்கு அருகில் உள்ள மலைப் பகுதியிலிருந்து பூயான் வெட்டிய கால்வாய்.

கயா

பிஹாரின் கயா மாவட்டம், லதுவா பகுதியில் உள்ளது கொத்திவாலா கிராமம். அடர்ந்த வனம் மற்றும் மலையால் சூழப்பட்டுள்ள இந்தக் கிராமம், கயாவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. விவசாயமும் கால்நடை வளர்ப்புமே இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் ஆகும். மாவோயிஸ்ட்கள் அடைக்கலம் புகும் இடமாகவும் இந்தக் கிராமம் குறிப்பிடப்படுகிறது.

இந்த கிராமத்தை சேர்ந்த லாங்கி பூயான் என்பவர் அருகில் உள்ள வனப் பகுதிக்கு கால்நடைகளை மேய்க்கச் செல்வது வழக்கம். கால்நடைகள் மேயும் நேரத்தில் அங்குள்ள மலைப் பகுதியில் இருந்து தனது கிராமத்துக்கு மழைத் தண்ணீர் வருவதற்காக கால்வாய் வெட்டத் தொடங்கியுள்ளார். 3 கி.மீ. நீளமுள்ள இந்தக் கால்வாயை அவர் கடந்த 30 ஆண்டுகளில் வெட்டி முடித்துள்ளார்.

இதுகுறித்து பூயான் கூறும்போது, “மழைக் காலங்களில் மலையிருந்து வரும் தண்ணீர் எங்கள் கிராமத்து குளத்தில் வந்து சேரும் வகையில் கால்வாய் வெட்டினேன். 30 ஆண்டுகளாக தனி ஆளாக வெட்டி முடித்தேன். எங்கள் கிராமத்தினர் பிழைப்புக்காக நகரங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால் நான் கிராமத்தை விட்டுச் செல்வதில்லை என முடிவு செய்தேன்” என்றார்.

அந்த கிராமத்தைச் சேந்த பட்டி மாஞ்சி என்பவர் கூறும்போது, “பூயான் தனது நலனுக்காக இந்தக் கால்வாயை வெட்டவில்லை. ஒட்டுமொத்த கிராமத்துக்காக வெட்டியுள்ளார். இதில் நிரம்பும் தண்ணீர் கால்நடைகளுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ள வயல்களுக்கு பாசனத்துக்கும் பயன்படும்” என்றார்.

ராம் விலாஸ் சிங் என்ற ஆசிரியர் கூறும்போது, “இந்தக் கால்வாயால் இங்கு வசிக்கும் நிறைய மக்கள் பயன் அடைவார்கள். பூயானின் நற்பணிக்காக பலரும் அவரை பாராட்டுகின்றனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x