Last Updated : 29 Aug, 2020 05:16 PM

 

Published : 29 Aug 2020 05:16 PM
Last Updated : 29 Aug 2020 05:16 PM

மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் அனைத்துக்கும் பொது வாக்காளர் பட்டியல்: மத்திய அரசு ஆலோசனை

மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் அனைத்துக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலை உருவாக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

வாக்காளர் பட்டியிலில் ஏற்படும் முரண்பாடுகளைக் களையவும், வாக்காளர் பட்டியல் சீராக இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள நிலையில், மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தனித்தனியாக தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிக்கிறது. அதேபோல உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் மாநிலத் தேர்தல் ஆணையம், நகராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கிறது.

இது தவிர பல்வேறு மாநிலங்களில் உள்ள தேர்தல் ஆணையங்கள் வரைவு வாக்காளர் பட்டியலையும் வெளியிட்டு, சொந்தமாக வாக்காளர் பட்டியலையும் தயாரிக்கின்றன.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் இருக்கும் முரண்பாடுகளைக் களையும் விதத்தில், மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் என அனைத்துக்கும் பொதுவான ஒரே வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டு ஆலோசித்து வருகிறது.

இந்த வாக்காளர் பட்டியல் மூலம் பட்டியலில் ஒரேசீரான தன்மை காணப்படும், செலவு மிச்சப்படும், ஒரே மாதிரியான பணி மீண்டும் மீண்டும் செய்வது தடுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மாநிலங்கள் சட்டமியற்றி, சுயமாக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்திக்கொள்ள அரசியலமைப்புச் சட்டப்படி அதிகாரம் இருக்கிறது. இதன்படி மாநிலங்களே சொந்தமாக வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கலாம் அல்லது, சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்தல் என மூன்று வகையான தேர்தல்களிலும் பயன்படும் வகையில் ஒரே மாதிரியான பொது வாக்காளர் பட்டியலை தயாரிக்கத் திட்டமிட்டு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போது மாநிலங்களை மத்திய தேர்தல் ஆணையம் தயாரித்த வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆனால், பொதுவான வாக்காளர் பட்டியல் முறை வந்தால், ஒரே பணியைத் தேர்தல் நேரத்தில் திரும்பச் செய்யும் பணி தவிர்க்கப்படும்.

ஒரே பணிக்கு இரு முறை செலவிடுவது தவிர்க்கப்படும். ஒரே வாக்காளர் பட்டியல் என்பது வாக்காளர்களுக்கும் நல்லதுதான். உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலின்போது குழப்பமில்லாமல் இருக்கும். பல நேரங்களில் பெயர் விடுபட்டுப்போவது தவிர்க்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக சமீபத்தில் பிரதமர் அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசித்து, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், தற்போதைய நிலை, எதிர்காலத்தில் எவ்வாறு எடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசித்துள்ளனர்.

ஒரே வாக்காளர் பட்டியல் முறைக்கு ஏற்கெனவே தேர்தல் ஆணையம், சட்ட ஆணையம், பணியாளர் மற்றும் சட்டத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x